இனி இந்த நாட்டிற்கு விசா இன்றி பயணிக்க முடியாது.. இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு
வாஷிங்டன்: சுற்றுலாப்பயணிகளை கவரவும் வேறு சில காரணங்களுக்காகவும் சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாட்கள் வரை தங்கிக்கொள்ள சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கின்றன. அந்த வகையில் மாலத்தீவுகள், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் செல்ல முடியும். இதேபோன்ற சலுகையை வழங்கி வந்த ஐரோப்பிய நாடு ஒன்று இந்தியார்களுக்கான சலுகையை ரத்து செய்துள்ளது. அது எந்த நாடு என்று விரிவாக பார்க்கலாம்.
ஒரு நாட்டு குடிமக்கள் மற்றொரு வெளி நாட்டிற்கு சுற்றுலா மற்றும் பணி நிமித்தம் என பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்றால் விசா பெறுவது அவசியம்.
இந்திய குடிமக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் உரிய முறையில் விசா பெற்ற பிறகே அந்த நாட்டிற்குள் பயணம் செய்ய முடியும்.

விசா இன்றி பயணம்
விசா பெற்றிருந்தால் மட்டுமே குடியுரிமை அதிகாரிகள் அனுமதி அளிப்பதுண்டு. எனினும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க போன்ற காரணங்களால் சில நாடுகள் விசா பெறுவதில் குறிப்பிட்ட நாடுகளுக்கு விலக்கும் அளிக்கும் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியர்களும் தாய்லாந்து, இந்தோனேசியா, மொரிசீயஸ், மாலத்தீவுகள், பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இன்றியே பயணம் செய்ய முடியும்.

திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவிற்கும் இதற்கு முன்பாக இந்தியர்கள் விசா இன்றி பயணிக்க அனுமதி அளித்தது. அதாவது 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி செர்பியாவில் இருக்க முடியும். 30 நாட்களுக்கு மேல் அந்த நாட்டில் தங்க வேண்டும் என்றால் மட்டுமே விசா அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த இந்த விசா சலுகையை திரும்பப் பெறுவதாக செர்பியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் அமல்
வரும் ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் செர்பியாவிற்கு விசா இன்றி நுழைய முடியாது என்றும் ஐரோப்பிய யூனியன் விசா கொள்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் செர்பிய அரசு தெரிவித்துள்ளது. செர்பியா அரசாங்கத்தின் இந்த புதிய அறிவிப்பு வரும் புத்தாண்டு முதல் அமல் ஆக உள்ள நிலையில், செர்பியாவின் தலைநகர் பெலாக்ரடில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய பயண அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி..
அந்த பயண அறிவுறுத்தலில், சாதாரண விசா வைத்திருக்கும் இந்தியர்கள் இனி செர்பியாவுக்கு வர வேண்டும் என்றால், செர்பியா தூதகரத்தில் பயணத்திற்கு முன்பாகவே விசாவை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தியா மட்டும் இன்றி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா-பிசாவு, துனிஷியா, புருண்டி ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு இருந்த விசா ஃப்ரீ சலுகையை செர்பிய அரசு ரத்து செய்துள்ளது. எனினும் இந்த நாடுகளுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதியே விசா இன்றி பயணம் செய்யும் சலுகை ரத்து செய்யப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications