அமெரிக்காவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்... தேசப்பிதா காந்தி சிலை அவமதிப்பு!
வாஷிங்டன்: வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் வாஷிங்டனில் போராட்டம் நடத்திய சிலர் தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலையை அவமதிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் செயலுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. காந்தியை அவமதித்து விட்டு இவர்கள் போராட்டம் நடத்தி என்ன பயன்? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தலைநகர் டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், அமைப்புகள் போராடி வருகின்றனர். மேலும், பல்வேறு வெளிநாடுகளிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகள் போராடி வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேரிலாந்து, வர்ஜீனியா, நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வட கரோலினா உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது சிலர் அங்கு இருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலை மீது ஏறி கோஷமிட்டனர். மேலும், சிலர் காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி மகாத்மாவுக்கு அவமரியாதை செய்தனர். போராட்டகாரர்களின் இந்த செயலுக்கு இந்த இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. டெல்லி-ஜெய்ப்பூர் சாலை முற்றுகை.. பெண்களும் களத்திற்கு வருகிறார்கள்
உலகின் அமைதி மற்றும் நீதியின் சின்னமாக திகழ்பவரை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. காந்தி சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் போராட்டக்காரர்கள் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அமைதியின் உருவமான காந்தியை அவமதித்து இவர்கள் போராட்டம் நடத்தி என்ன பயன் என்று பலரும் கூறி உள்ளனர்.