'வாவ்' சூப்பரா இருக்கே.. குவைத்தில் அரிதாக பெய்த ஆலங்கட்டி மழை.. வியந்து பார்த்த மக்கள்!
வாஷிங்டன்: உலகின் மிகவும் வெப்பமான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் குவைத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. அரிதாக பெய்த இந்த ஆலங்கட்டி மழையை குவைத் மக்கள் வியந்து பார்த்தனர். அங்குள்ள சிறுவர்களும் மகிழ்ச்சியில் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டனர்.
உலகின் மிக வெப்பமான நாடுகளில் குவைத். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத் பாலைவனம் மிகுந்த நாடாகும்.
எண்ணெய் வளம் மிக்க இந்த நாடு செல்வ செழிப்புமிக்க நாடாகவும் விளங்குகிறது.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பருவ நிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கூட சொல்லப்படுகிறது. கடந்த 2016- ஆம் ஆண்டு வெயில் காலத்தில் 54 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அதாவது 129- டிகிரி பாரன்ஹீட் ஆக வெப்பம் பதிவாகி இருந்தது. குவைத்தின் பல பகுதிகளில் வெப்ப நிலை இன்னும் 4.5 டிகிரி செல்சியஸ் ஆக 2071- 2100 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரசித்து பார்த்த மக்கள்
அந்த அளவுக்கு வெப்பம் தகிக்கும் நாடாக இருக்கும் குவைத்தில் மிகவும் அரிதான குளிர்கால நிகழ்வாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகளில் ஆலங்கட்டி மழைகள் பெய்ததால் சாலைகளில் கிடந்த பனிக்கட்டிகளை அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் எடுத்து பார்ப்பதையும் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடும் காட்சிகளும் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பல பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து இந்த அரிதான நிகழ்வை ரசித்ததையும் காண முடிந்தது.

பனிக்கட்டிகள் போர்வை போர்த்தியது போல
குவைத்தின் வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் இது பற்றி கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளில் குளிர் காலங்களில் இதுபோன்ற ஒரு ஆலங்கட்டியை மழையை பார்த்தது இல்லை என்றும் இவ்வளவு பெரிய ஆலங்கட்டி மழையைப் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார். குவைத்தின் தெற்கு பகுதிகளில் உள்ள சாலைகளில் பலவும் பனிக்கட்டிகள் போர்வை போர்த்தியது போல நிரம்பி காட்சியளித்தன.

சாலைகள் மூடப்பட்டன
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள உம் - அல் ஹைய்மன் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழையுடன் பலத்த காற்றும் வீசும் என்றும் 55 கி.மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. குவைத்தில் மிகவும் அரிதான நிகழ்வாக ஆலங்கட்டி மழை பெய்தது தொடர்பான காட்சிகளை அந்த நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. ஆலங்கட்டி மழை காரணமாக பல பகுதிகளிலும் சாலைகள் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications