சீறிப் பாய்ந்தது ராக்கெட்! விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபன்ஷு சுக்லா.. வரலாறு படைக்கும் இந்தியா
வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் ஆக்சியம் மிஷன் 4 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த ராக்கெட் ஏவப்படுவது தொடர்ச்சியாகத் தாமதம் ஆன நிலையில், இன்று வெற்றிகரமாக அது விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா விண்வெளி துறையில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. பல அறிவியல் ஆய்வுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வில் இன்று மகத்தான சாதனை படைக்கப்படுகிறது.

விண்வெளி பயணம்
அதவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சுக்லா தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதே மையத்தில் இருந்துதான் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969ஆம் ஆண்டு அப்போலோ 11 விண்கலத்தில் நிலவுக்குப் பயணம் செய்தார்.
இந்திய நேரப்படி சரியாகப் பிற்பகல் 12.01 மணிக்கு சுக்லா டீம் இருந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது. சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு. நாளை மாலை 4.30 மணிக்கு அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார்கள். ஒட்டுமொத்த நிகழ்வையும் நாசா இணையதளம் லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது.
இரண்டாவது இந்தியர்
குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் ஆவார். இதற்கு முன்பு விங் கமாண்டர் ராகேஷ் சர்மா 1984ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தார். இப்போது சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார். 39 வயதான விமானி சுபன்ஷு சுக்லா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்காக இஸ்ரோவால் தேர்வு செய்யப்பட்டார். இந்த குழுவினர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்ய சுமார் ஒரு மாதமாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மிஷனில் அவர்கள் சுமார் இரண்டு வாரம் விண்வெளியில் இருப்பார்கள்.. அங்கு இந்த குழு மொத்தம் 60 அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. அதில் ஏழு சோதனைகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டவை. குரூப் கேப்டன் சுக்லா விண்வெளியில் இருந்து சில நிகழ்ச்சியில் பங்கேற்பார். மேலும் விண்வெளியில் இருந்து ஒரு முக்கிய நபருடன் கலந்துரையாடுவார்.
தாமதங்கள்
ஆக்சியம்-4 திட்டத்தின் முதல் கடந்த மே 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களுக்காக இது பலமுறை தாமதமானது. வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஆக்சிடைசர் கசிவு போன்ற காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டன. இந்தச் சூழலில் தான் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஏவுகணை ஏவப்படும் என்று ஆறாவது முறையாக நாசா அறிவித்தது.
இந்தியா அமெரிக்கா உறவு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான நான்காவது தனியார் பயணமான ஆக்சியம்-4 மிஷன் இருக்கும். நாசாவின் பார்டனர்ஷிப் உடன் ஹூஸ்டனைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இந்த மிஷன் இயக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மிஷன் ஆகாஷ் கங்கா என்றும் குறிப்பிடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023ல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது தான் இந்த மிஷன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியர் ஒருவரைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இது இந்தியா அமெரிக்கா இடையே விண்வெளி ஆய்வில் இருக்கும் பார்ட்னர்ஷிப்பையே குறிக்கிறது.












Click it and Unblock the Notifications