டிரம்பிற்கு சிக்கல்? குற்றச்சாட்டுக்கள் பதிவு.. வழக்கு விசாரணை தொடங்கும் தேதியை அறிவித்தது கோர்ட்
வாஷிங்டன்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் வைத்து டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு முறைகள் முடிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். டிரம்பிற்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப கடந்த 2016- ஆம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் டொனால்டு டிரம்ப் தொடர்பு வைத்திருந்ததாகவும் இந்த தொடர்பை மறைக்க ஆபாச பட நடிகைக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு
ஆனால் தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது. அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. எனவே டிரம்பிற்கு எதிராக விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.

டிரம்பிற்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள்
இந்த வழக்கில் டிரம்பிற்கு எதிரான arraignment எனப்படும் முறையான குற்றச்சாட்டு பதிவுக்காக அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டிரம்பை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். டிரம்பிற்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. தான் அப்பாவி என்றும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று டிரம்ப் மறுத்தார். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் புறப்பட்டு சென்றார்.

பாலியல் உறவில் இருந்த பெண்ணுக்கு
குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் கூறியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் டவர் டோர்மேனுக்கு 30,000 டாலர் வழங்கியது, டிரம்புடன் பாலியல் உறவில் இருந்த பெண்ணுக்கு 1,50,000 டாலர் கொடுத்தது மற்றும் மூன்றாவதாக ஆபாச பட நடிகைக்கு 1,30,000 டாலர் கொடுத்தது ஆகிய புகார்களில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருக்கடியை ஏற்படுத்துமா
டிரம்பிற்கு எதிரான வழக்கு விசாரணையை ஜனவரி 2024ல் தொடங்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் டொனால்டு டிரம்பிற்கு இந்த வழக்கு விசாரணை கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications