அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அந்நாட்டின் உளவு அமைப்புகளான சிஐஏவுக்கு தலைமை தாங்கிய நபர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "டிரம்ப் ஒரு நிலைகுலைந்த நபர் என்றும் அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மாஜி CIA இயக்குநர் ஜான் ப்ரென்னன் கூறியுள்ளார். இது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.
வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து மோதல் இப்போது முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றாலும் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்பு ஈரானுக்கு டிரம்ப் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். "ஈரான் எங்களது நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், இன்று இரவோடு அந்த மொத்த நாகரிகமுமே அழிந்துவிடும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

டிரம்ப் பேச்சு
இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோல பேசலாமா எனப் பலரும் டிரம்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சிஐஏ முன்னாள் தலைவரான ஜான் ப்ரென்னன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இவர் ஒபாமா காலத்தில் சிஐஏவுக்கு தலைமை தாங்கியவர். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜான் ப்ரென்னன், டிரம்ப்பை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.
பதவி நீக்கம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டிரம்ப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பாருங்கள்.. அவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையே அது காட்டுகின்றன. இந்த நபரிடம் தான் நாட்டின் ராணுவக் கட்டுப்பாடுகள் உள்ளன. அது மிகப் பெரிய ஆபத்து. இவரைப் போன்ற ஒருவரை மனதில் வைத்துத்தான் அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தம் எழுதப்பட்டது என நான் நினைக்கிறேன்" என்று சாடியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 25வது சட்டத் திருத்தம் என்பது, ஓர் அதிபர் தனது கடமைகளைச் செய்யத் தகுதியற்றவராக இருக்கும்போது அல்லது இறக்கும்போது, துணை அதிபர் அந்தப் பொறுப்பை ஏற்பது குறித்த விதியாகும். ஏற்கனவே எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் டிரம்ப்பை இந்தச் சட்டத்தின் கீழ் நீக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உடனடியாக பதவி நீக்கம் செய்ய முடியாது
சட்டம் இருக்கிறது என்பதற்காக டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட முடியாது. நடைமுறையில் டிரம்ப்பைத் தூக்குவதற்கான வாய்ப்பு கிட்டதட்ட 'ஜீரோ' என்றே சொல்லலாம்.. ஏனெனில், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமைச்சரவை மொத்தமும் டிரம்ப் பக்கமே உறுதியாக நிற்கிறது. எனவே, டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்குவது ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது.
பின்னணி
அதேநேரம் டிரம்ப்பை ஜான் ப்ரென்னன் இப்படி வெளுத்து வாங்க ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. டிரம்ப் நிர்வாகம் ப்ரென்னன் மீது கிரிமினல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்னாள் FBI இயக்குநர் ஜேம்ஸ் கோமி மீது, நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் ஜான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரம் இப்போது தன்னையும் டிரம்ப் குறிவைக்கிறார் என்றும் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் என்றும் ப்ரென்னன் குற்றம்சாட்டுகிறார். இந்தச் சூழலில் தான் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என்றும் வேன்ஸை அதிபராக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications