இந்தியாவை சீண்டாதீங்க.. டிரம்ப்பை எதிர்த்த ஒபாமாவின் வலதுகரம்.. கடும் விளாசல்.. யார் இந்த கெர்ரி?
வாஷிங்டன்: ‛‛டிரம்பின் கொள்கை என்பது இந்தியா உள்பட பிற நட்பு நாடுகளை அமெரிக்காவிடம் இருந்து தள்ளி வைக்கும். நரேந்திர மோடி - டிரம்ப் இடையேயான இந்த மோதல் போக்கு துரதிர்ஷ்டவசமானது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக டிரம்ப் நிர்வாகம் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இது சரியில்லை'' என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வலதுகரமாக செயல்பட்ட அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து டிரம்பை கண்டித்துள்ளார்.
அமெரிக்காவும், நம் நாடும் நட்பு நாடாக செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு ஆண்டும் இருநாடுகள் இடையேயான உறவு என்பது அதிகரித்து வந்தது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் எடுத்த நடவடிக்கையால் தற்போது இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் பல நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். அதன்படி நம் நாட்டுக்கும் 50 சதவீத வரியை தீட்டி உள்ளார். ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் நம் நாட்டுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த வரிகளை அவர் விதித்தார்.
இந்தியா - அமெரிக்கா பிரச்சனை
இந்நிலையில் தான் முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் வரும் 27 ம்தேதி அடுத்தகட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இதனால் இருநாடுகள் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்கா வரி விதித்தாலும் கூட நாட்டின் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. தற்போது இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒபாமாவின் வலதுகரம்
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு வரி விதித்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி விமர்சனம் செய்துள்ளார்.
இவர் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி இருந்தார். இதுதொடர்பாக, ஜான் கெர்ரி கூறியதாவது:
டிரம்ப் மீது சாடல்
‛‛டிரம்பின் கொள்கை என்பது இந்தியா உள்பட பிற நட்பு நாடுகளை அமெரிக்காவிடம் இருந்து தள்ளி வைக்கும். நரேந்திர மோடி - டிரம்ப் இடையேயான இந்த மோதல் போக்கு துரதிர்ஷ்டவசமானது. இந்தியா - அமெரிக்கா இடையேயான பிரச்சனையை இருதரப்பினரும் பேசி தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக டிரம்ப் நிர்வாகம் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக நட்பு நாடுகளை பணிய வைக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் உறவுகளை தான் பாதிக்கும். நட்பு நாடுகளை இப்படியான நடைமுறையுடன் கையாள கூடாது. தற்போதைய நிலைமையை நினைத்து கவலைப்படுகிறோம். அமெரிக்காவின் சில பொருட்களுக்கு இந்தியா பூஜ்ஜியம் வரி விதிப்பை கொண்டு வருவதாக அறிகிறோம். இதுவே பெரிய முன்னேற்றம் தான்’’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர் எதிர்ப்பது முதல் முறையல்ல
இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பை அமெரிக்கர்கள் எதிர்ப்பது இது முதல் முறையல்ல. டிரம்பின் கட்சியை சேர்ந்த நிக்கி ஹேலே சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தர். அதேபோல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டனும் டிரம்பை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications