வெடிக்கும் உலக போர்? அமெரிக்க, பிரிட்டன் இணைந்து ஹவுதிக்களை தாக்குவது ஏன்.. யார் இவர்கள்.. பின்னணி!
வாஷிங்டன்: ஹவுதி படை மீது அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. உலக நாடுகள் இவ்வளவு தூரம் கவனிக்கும் இந்த ஹவுதிக்கள் யார்.. இவர்கள் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
செங்கடல் பகுதிகளில் வரும் வணிக கப்பல்கள் மீது ஹவுதிக்கள் சமீப காலமாகத் தாக்குதல்கள் நடத்தி வந்தன. இதற்கிடையே இதற்குப் பதிலடி தரும் தாக்குதலைப் பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் ஆரம்பித்துள்ளன.

சரி இந்த ஹவுதிக்கள் யார்.. உலக நாடுகள் இவ்வளவு தூரம் கவனிக்கும் இந்த ஹவுதிக்கள் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஹவுதி: ஹவுதிக்கள் என்பது ஏமனின் ஷியா முஸ்லீம் சிறுபான்மையினரான ஜைதிகளின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுவாகும். இந்த இயக்கத்தை ஹுசைன் அல் ஹவுதி தொடங்கிய நிலையில், அவரது பெயரே இந்த இயக்கத்திற்கும் வைக்கப்பட்டது. 1990களில் அப்போதைய அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழலை எதிர்த்துப் போராட இந்த குழு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு அப்போதைய அதிபர் சலேவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து சலே சவுதி அரேபிய ராணுவத்துடன் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒழிக்க முயன்றார்.. ஆனால் ஹவுதிக்கள் அவர்கள் இருவரையும் விரட்டி அடித்தனர். அப்போது ஹவுதி படைக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்தது. இப்போது அப்துல் மாலிக் அல் ஹவுதி என்பவர் இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
தொடரும் போர்: கடந்த 2014 முதல் ஏமன் அரசுக்கு எதிராக இந்த ஹவுதி படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரால் கடந்த 2021 வரை மட்டும் சுமார் 3.77 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், 40 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். ஹவுதிக்கள் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் இணைந்து இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
லெபனான் நாட்டில் உள்ள ஷியா ஹிஸ்புல்லா படையைப் போன்றவர்கள் தான் இந்த ஹவுதிக்களும். இரு பிரிவுக்கும் இடையே நீண்ட உறவும் இருக்கிறது. கடந்த 2014 முதலே ஹிஸ்புல்லா படை ஹவுதிக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஹிஸ்புல்லா மட்டுமன்றி ஹவுதிக்களை ஈரானையும் நட்பு நாடாகக் கருதுகிறது. ஏனெனில் இருவருக்கும் சவுதி அரேபியா தான் பொது எதிரி.
பின்னணியில் ஈரான்: ஈரான் தான் ஹவுதிக்களுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஹவுதிக்கள் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத் துறை தகவல்கள் முக்கியமாகத் தேவைப்படும் நிலையில், அதையும் கூட ஈரான் அரசே வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பல முறை அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இருப்பினும், ஈரான் தனக்கும் ஹவுதிக்களும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதைத் தொடர்ந்து மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது.
ஏமன் நாட்டை இப்போது அதிபர் லீடர்ஷிப் கவுன்சில் என்ற அமைப்பு தான் கட்டுப்படுத்தி வருகிறது. கடந்த 2022இல் தான் அப்போதைய அதிபர் அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடி என்பவர் இந்த குழுவுக்குத் தனது அதிகாரிகளைக் கொடுத்தார். ஆனால், ஏமன் நாட்டின் பெரும்பகுதி ஹவுதி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தான் பெரும்பாலான ஏமன் மக்கள் வசிக்கிறார்கள்.
செங்கடல்: ஏமன் நாட்டில் செங்கடல் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் முழுக்க ஹவுதி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதன் காரணமாகவே செங்கடல் கப்பல்கள் மீது அவர்களால் எளிதாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த படை தான் வரி வசூல் செய்வது.. பணத்தை அச்சிடுவது என அரசின் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். ஹவுதி படை மற்றும் நிர்வாகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பார்கள் என ஐநா கூறியிருந்தது.
செங்கடல் தாக்குதல் ஏன்: ஹவுதிக்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இஸ்ரேல் ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்தும் நிலையில், அதைக் கண்டிக்கும் வகையிலேயே ஹவுதிக்கள் இதுபோல செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications