டிரம்பால் அமெரிக்காவுக்கு விழும் பேரிடி? "இது" நடந்தால் பல கோடி பேர் நடுத்தெருவுக்கு வந்திடுவாங்களே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரியால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த பொருளாதார மந்தநிலை என்றால் என்ன.. இது ஏன் ஏற்படுகிறது.. பொருளாதார மந்தநிலை ஏற்படுவதை அறிவிப்பது யார்.. இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரிகள் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. உலகெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் என பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடுமையாகச் சரிந்தன. இவை எல்லாவற்றையும் விட அமெரிக்கா பொருளாதார மந்தநிலைக்குச் செல்லுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

டிரம்ப் வரி
டிரம்ப் இரண்டு பகுதிகளாக வரியை அறிவித்துள்ளார். முதலில் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமே இல்லாமல் 10% இறக்குமதி வரி. அடுத்து ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு வரி என்று 60 நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரிகள் அறிவித்துள்ளார். இவை அனைத்தும் நாளை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. வரும் காலங்களில் பேச்சுவார்த்தை மூலம் இந்த வரிகளின் பெரும்பகுதி திரும்பப் பெறப்பட்டாலும் கூட அது ஏற்படுத்தும் பாதிப்புகள் சரியாக அதிக காலம் ஆகும் என எச்சரித்துள்ளனர்.
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சுருங்கி வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸின் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட 35% வாய்ப்பு இருப்பதாக இவர்கள் குறிப்பிட்ட நிலையில், இந்த வாரம் மந்தநிலை ஏற்பட 45% வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். கோல்ட்மேன் சாக்ஸ் மட்டுமில்லை, ஜேபி மோர்கன் உள்ளிட்ட பல சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் இதே கணிப்பைச் செய்துள்ளனர்.
பேரிடி விழும்
ஒருவேளை அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் சூழலில், பல கோடி பேர் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் இருக்கிறது. கடந்த காலங்களில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது (2008, 2002) இதுபோன்ற பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது
இப்படி உலகெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை குறித்தும்.. அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்துமே பேசி வருகிறார்கள். இதனால் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை குறித்தும் அது சுற்றி இருக்கும் கேள்விகளுக்கான விடைகளையும் நாம் பார்க்கலாம்.

பொருளாதார மந்தநிலை உடனடியாக ஏற்படும் அறிகுறிகள் இருக்கிறதா?
தற்போது வரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இருப்பினும், அச்சம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நிலை நீடித்தால் இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் 0.8% சுருங்கக்கூடும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் அட்லாண்டா கிளை கணித்துள்ளது. அதேநேரம் இது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கணிப்பு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக 2020ல் கொரோனா பெருந்தொற்று, 2007ல் வீட்டுக் கடன் பூதாகரமானது, அதற்கு முன்பு 2000களில் டாட் காம் பஸ்ட் உள்ளிட்டவை மந்தநிலையை ஏற்படுத்தியது. அதாவது பெரும் அதிர்ச்சி தரும் விஷயம் மார்க்கெட்டில் நடக்கும்போது பொருளாதார மந்தநிலை ஏற்படும். டிரம்பின் இந்த அறிவிப்பு அதே அளவு பாதிப்பை ஏற்படுத்துமோ என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
அதேநேரம் டிரம்பின் அனைத்து வரிகளும் அமலுக்கு வந்தால் அமெரிக்காவின் சராசரி வரி 23%ஆக இருக்கும். கடந்த 1908க்குப் பிறகு அமெரிக்காவில் இந்தளவுக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறை. . ஓவர்நைட்டில் இதுபோல வரிகளை அறிவிப்பது என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியாது. எனவே நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
டிரம்பும் அவரது அதிகாரிகளும் என்ன சொல்கிறார்கள்?
வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தாலும் கூட டிரம்ப் அதை எல்லாம் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை. உடலுக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டால் எப்படி நாம் மருந்து எடுக்க வேண்டி இருக்குமோ அதுபோலத் தான் அதுவும் என்கிறார் டிரம்ப்.
டிரம்ப் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது என்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க நீண்டகால நோக்கில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்நாட்டின் டிரஷரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மந்தநிலை தொடங்கிவிட்டதை எப்படிக் கண்டறியலாம்?
அமெரிக்கா முழுக்க வேலையிழப்புகள் இருக்கும். மேலும், வேலையின்மை அதிகரிக்கும். இந்த இரண்டும் தான் முக்கியமான அறிகுறி. வேலையில்லாமல் இருப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பெற எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்ற டேட்டாவை அமெரிக்க அரசு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வெளியிடும். அதை வைத்தே நம்மால் ஓரளவுக்கு நிலைமை புரிந்து கொள்ள முடியும்.
அப்பல்லோ என்ற பொருளாதார நிறுவனத்தின் வல்லுநர் டோர்ஸ்டன் ஸ்லோக் வேறு சில மாற்றங்களும் நடக்கத் தொடங்கி இருப்பதாக எச்சரிக்கிறார். அதாவது அமெரிக்காவில் திவால் ஆவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேளிக்கை செலவின் மையமாகக் கருதப்படும் லாஸ் வேகாஸுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், சினிமா பார்ப்பது உள்ளிட்ட செலவுகளையும் குறைத்து வருவதாக டோர்ஸ்டன் ஸ்லோக் கூறுகிறார்.

டிரம்ப் வரியைத் தவிர அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் விஷயங்கள் என்ன!
டிரம்ப் நிர்வாகம் பெடரல் ஊழியர்கள் வரிசையாக வேலையை விட்டுத் தூக்கி வருகிறது. இது அரசு செலவுகளைக் குறைக்கும் என்பது அவர்கள் வாதம். இருப்பினும், அரசு திடீரென செலவை எதிர்பார்க்காத அளவுக்குக் குறைத்தால் அதுவும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி சில வாரங்களில் திரும்பப் பெறப்பட்டாலும் கூட முதலீட்டாளர்கள் யோசித்தே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வார்கள். ஏனென்றால் டிரம்ப் எப்போது எதைச் செய்வார் என்றே தெரியாது என்ற அச்சம் இருக்கும். மேலும், பெரு நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இந்த வரியை அறிவித்தார். ஆனால், பெரு நிறுவனங்களை அதைச் செய்ய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
மந்தநிலை எப்போது தொடங்கியது என்பதை யார் தீர்மானிப்பார்கள்?
தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தில் உள்ள (National Bureau of Economic Research) வல்லுநர் குழு தான் இதை அறிவிக்கும். தொடர்ந்து பல மாதங்கள் பொருளாதாரம் சரிந்து வந்தால் இந்த குழு பொருளாதார மந்தநிலை தொடங்கிவிட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை என்று அறிவித்தால் அதன் தாக்கம் உலகெங்கும் இருக்கும். இதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என அறிவிக்க மாட்டார்கள். வேலைவாய்ப்பு, வருமானம், பணவீக்கம், சில்லறை விற்பனை மற்றும் தொழிற்சாலை உற்பத்தி எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதா என்பதை அறிவிப்பார்கள். அதிலும் கூட அறிவிப்பு உடனடியாக இருக்காது. பொருளாதார மந்தநிலை தொடங்கிய பிறகு, சில மாதங்கள் முதல் ஓராண்டு வரை பார்த்து அதை 100% உறுதி செய்த பின்னரே இந்த வல்லுநர் குழு அறிவிப்பை வெளியிடும்.












Click it and Unblock the Notifications