சித்திரை திருவிழா கோலாகல கொடியேற்றம்..சங்கரன் கோவில், உத்தரகோசமங்கையில் மே 5ல் தேரோட்டம்
தென்காசி: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சிவ ஆலயங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை ஆலயத்தில் சித்திரை திருவிழாவானது கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி ஆலயம். கோமதி அம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்மன் தபசு திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை பக்தர்களுக்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
மேலும் விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயில் யானை கோமதி பெருங்கோட்டருக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.

பின்னர், காலை 5.47 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே 5ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோவில் என்றும், உலகில் தோன்றிய முதல் சிவாலயம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மரகத நடராஜரை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த கோவிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோவிலின் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் கொடியேற்றப்பட்டு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்கள் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுற்றி வரும் வீதியுலா புறப்பாடு நடைபெறும்.இந்நிலையில், சித்திரை திருவிழாவின் 10ம் நாளான மே 5ம் தேதி காலையில் மங்கைப்பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பதும், மாலை தேரோட்டமும் சிறப்பாக நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications