ஆடி, தை அமாவாசை தர்ப்பணத்திற்கும், புரட்டாசி அமாவாசை தர்ப்பணத்திற்கும் என்ன வித்தியாசம்?
சென்னை: ஆடி அமாவாசை, தை அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணத்திற்கும் மகாளய அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம். இதை தெரிந்து கொண்டு இந்த மகாளய புண்ணிய அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள்.
மகாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் நம் முன்னோர்களுக்கு நம்மால் முடிந்த வரையில் தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட வேண்டும். அவரவர் குடும்ப வழக்கத்தின்படி இதை செய்யலாம்.

இந்த பூமிக்கு நாம் 3 கடன்களை செய்ய வந்திருக்கிறோம். தேவ ருணம், ரிஷி ருணம், பித்ரு ருணம். தேவ ருணம் என்பது நாம் பூஜை செய்வதால் அது கழிந்து விடுகிறது. ரிஷி ருணம் எப்படியெல்லாம் நாம் வழிபட வேண்டும் என்பதை ரிஷிகள் சொல்லி நாம் செய்கிறோம்.
பித்ருருணம் என்பது தாய், தந்தையர் உயிருடன் இருக்கும் வரை அவர்களின் பேச்சை கேட்டு நடப்பது, அவர்கள் மறைந்த பிறகும், அவர்கள் கூறியதை பின்பற்றுவதாகும். அது போல் தர்ப்பணம் எனும் கடமையையும் செய்ய வேண்டும். மாதாமாதம் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் மகாளய அமாவாசைக்கு கொடுப்பது நல்லது.
ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை என 3 அமாவாசைகள் முக்கியமானது. இந்த மூன்று அமாவாசைகளிலும் முக்கியமாக திதி கொடுக்க வேண்டும். அதில் மகாளய அமாவாசைக்கு கொடுக்கும் திதி மட்டும் வித்தியாசமானது.
தை, ஆடி அமாவாசைகளில் கொடுக்கும் திதியானது சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் போய் சேர கூடியது. உதாரணமாக, அப்பா, அம்மாவுக்கு திதி கொடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் இந்த திதி போகும். ஆனால் மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் 21 தலைமுறையினருக்கும் திதி கொடுத்த புண்ணியத்தை கொடுக்கும்.
உங்கள் தலைமுறைகளில் யாராவது முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் விட்டு அதனால் பித்ரு சாபம் இருந்தாலும் மகாளய அமாவாசைக்கு திதி கொடுத்தால் அந்த சாபம் நீங்கி உங்கள் வீடுகளில் சுபிட்சம் உண்டாகும்.
நம் முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நமது தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் அமாவாசைதான் புரட்டாசி அமாவாசை. சூரிய உதயத்திற்கு பிறகுதான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து முடித்துவிட வேண்டும்.
வாழைக்காய், அரிசி தானம் கொடுப்போருக்கு வாழ்க்கையில் உணவுக்கு பஞ்சமே இருக்காது என்பார்கள். மறந்து போனவனுக்கு மகாளம் என்பார்கள். அது போல் பெற்றோர்களின் திதி தெரியாதவர்கள் புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கலாம். நம் முன்னோர்கள் ஆசி இருந்தால் எந்த தீயவினைகளும் நம்மை அண்டாது என்பதை மறக்காதீர்கள்.
மகாளய அமாவாசை அன்று வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முருங்கைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் சேர்க்காமல் சமையல் செய்து விரதம் இருந்து அன்னதானம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும். மகாளய அமாவாசை அன்று எள்ளையும் சுத்தமான தண்ணீரையும் கரைத்து விடுவதுதான் சிறப்பு.
இவ்வாறு நாம் இறைக்கும் நீரானது, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை அடைகிறது. தர்ப்பணம் கொடுப்பதில் மிகவும் முக்கியமானது பிண்டதானம். மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் அல்லது மாவுடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications