பழனி முருகன் கோவில் குடமுழுக்கு..ஜொலிக்கும் ராஜகோபுர கலசங்கள்..அன்னை தமிழில் மந்திரங்கள் ஒலிக்குமா
மதுரை: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்துக்கு கருத்து கூற வேண்டியது இல்லை எனவும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் நடைபெற உள்ள குடமுழுக்கு நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அர்ச்சகர்களின் புகார்களுக்கு மத்தியில் கும்பாபிஷேக பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

குடமுழுக்கை முன்னிட்டு 23ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. 26ஆம் தேதி காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாதவிநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடைபெறும். 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகன் கோவிலில் நடைபெறப்போகும் கும்பாபிஷேகத்தை பார்க்க பக்தர்கள் ஆவலாக உள்ளனர்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். அந்த ராஜ கோபுரத்தை அலங்கரிப்பது கலசங்கள்தான். பழனி முருகன் கோவில் ராஜகோபுர கலசங்கள், பிரகார கலசங்கள் தற்போது புது பொலிவுடன் ஜொலிக்கின்றன.
இந்த நிலையில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பது தொடர்பாக ஜனவரி 20ஆம் தேதி பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம் நடைபெறும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவித்துள்ளார்.
இதனிடையே கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "பழனி முருகன் கோயில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அந்த கோயிலுக்கான குடமுழுக்கு விழா ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் முருகன் என போற்றப்படும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும். தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே குடமுழுக்கின்போது மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில் குடமுழுக்குகளிலும் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது பழனி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். தஞ்சை பெரிய கோயிலிலும் தமிழில் மந்திரம் கூறி குடமுழுக்கு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.எனவே, அதன் அடிப்படையில் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்துக்கு கருத்து கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications