பணத்தை இப்படி பதுக்கி வைத்தால் மூட்டை மூட்டையாக சேரும்..ஆன்மீகம் கூறும் அற்புத பரிகாரங்கள்
சென்னை: நம்முடைய வீட்டில் சிறந்த நிதி அமைச்சர் அம்மாதான். அப்பா கொடுக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து எதிர்பாராத நேரத்தில் பெரிய தொகையாக எடுத்து வீட்டின் முக்கிய தேவைகளுக்கு செலவு செய்வார். அம்மா பணத்தை சேமித்து வைக்கும் இடமே அலாதியானது. அஞ்சரைப்பெட்டிதான் அம்மாவிற்கு பேங்க். அரிசி பானையும், பருப்பு டப்பாவும் அம்மாவின் உண்டியலாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் பணம் வீண் விரைய செலவு ஆகாமல் சேமிப்பு அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த பரிகாரங்களை செய்தால் நாம் ஆசைப்படுவது போல பணம் மூட்டையாக சேரும் என்பது உறுதி.
பணம்தான் அனைத்திற்கும் பிரதானமாக இருக்கிறது. ஏழையாக பிறந்தாலும் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். எல்லோருக்கும் டாடா, பிர்லா, அம்பானி, அதானி போல கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் அதற்கேற்ப முயற்சியும் செய்வார்கள். ஒரு சிலரால் மட்டுமே நடுத்தர குடும்பத்தில் பிறந்தும் கோடீஸ்வரர் ஆக உயரும் யோகம் கை கூடி வரும்.
பணத்தின் மீது ஆசைப்பட வேண்டும். நாம் எந்த அளவிற்கு பணத்தின் மீது ஆசையும் மதிப்பும் வைக்கிறோமோ அந்த அளவிற்கு பணம் நம்மை விரும்பத்தொடங்கும். குபேரன் அருளும் அன்னை மகாலட்சுமியின் அருளும் கை கூடி வரும். சரி பணத்தை பத்திரமாக வைக்கவும்... வீட்டில் அதிகம் பணம் சேரவும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

அம்மாவின் பேங்க்
நம்முடைய முன்னோர்கள் பணத்தை பல இடங்களில் சேமித்தனர். அம்மா, பாட்டியின் சேமிப்பு முறையே அலாதியானது. வீட்டில் சமையலறைதான் முக்கியமான பேங்க் ஆக இருக்கும். அரிசி மூட்டையில்தான் பணத்தையும் நகையையும் பதுக்கி வைத்திருப்பார்கள். காரணம் திருடர்கள் அரிசி பானையில் கை வைக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை. எனவே இன்றைய கால கட்டத்தில் நாமும் பணத்தை அரிசி பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் சில நாணயங்களையாவது அரிசி டப்பாவில் போட்டு வைக்க பணம் வீட்டில் சேரும். விரைய செலவு தவிர்க்கப்படும்.

மிளகாய் டப்பா
நம்மிடம் இருக்கும் பணத்தைப் பார்த்து பலர் பொறாமைபடுவார்கள். இதனால் கண் திருஷ்டி ஏற்படும். இதனால் திடீர் மருத்துவ செலவு வரும். மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது. எனவே நம் வீட்டில் உள்ள மிளகாய் டப்பாவில் கொஞ்சம் பணத்தை சிறு மூட்டையாக கட்டி போட்டு வைக்கலாம். இதனால் பணத்திற்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கும். வாரம் ஒருமுறை மிளகாய் டப்பாவில் இருந்து சிறிதளவு பணத்தை எடுத்து செலவு செய்வதால் பணம் மேலும் மேலும் பல வழிகளில் இருந்தும் சேரும். உங்களின் சேமிப்பும் அதிகரிக்கும்.

அஞ்சறைப்பெட்டி
பணத்தை ஈர்க்கும் ஆற்றலும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள சில பொருட்களுக்கு உள்ளது. அந்த பரிகாரத்தையும் செய்தால் பணம் மேன்மேலும் பெருகும். நாணயங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அது போல ரூபாய் நோட்டில் குபேரன் வாசம் செய்கிறார்.சம்பள பணத்தை வாங்கி வந்த கணவர் வீட்டு செலவுக்கு கொடுக்கும் பணத்தில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வையுங்கள். அதனுடன் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் போடுங்கள். இந்த நோட்டு மற்றும் சில்லறை நாணயங்களை வைத்ததும் அதனுடன் ரெண்டு ஏலக்காய், ஒரு சிறு துண்டு பட்டை, அண்ணாச்சி மொக்கு ரெண்டு, கிராம்பு 3, குண்டு மஞ்சள் ஒன்று போட வேண்டும். இந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.

குபேரன் அருள்
இதன் வாசம் பணத்தின் மீது படும்பொழுது, நமக்கு குபேரன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் கொண்டு போய் வைக்க வேண்டும். வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கலாம். வடக்கில் குபேரன் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது எனவே வடக்கில் இந்த கிண்ணத்தை வைத்துவிட்டு, நீங்கள் எப்பொழுது எல்லாம் பூஜை செய்கிறீர்களோ, அப்பொழுது எல்லாம் அந்த கிண்ணத்திற்கு சாம்பிராணி தூபம், ஊதுபத்து தூபம் காண்பியுங்கள்.

வீண் விரையம் தவிர்க்கலாம்
மாதக் கடைசியில் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டு அடுத்த மாதம் சம்பள பணத்திலிருந்து மீண்டும் ஒரு 500 ரூபாய், 5 ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து வாசனைப் பொருட்களை அதனுடன் வைத்து அப்படியே திறந்த நிலையில் வைத்து விட வேண்டும். இது போல ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படாது. அனாவசிய செலவுகள், வீண் விரயங்கள் எனப்படும் இந்த தொந்தரவிலிருந்து விடுபடுவதற்கு ரொம்பவே எளிமையான ஆன்மீக பரிகாரமாக இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை
நம்முடைய வீட்டில் செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது. செவ்வாய்கிழமை கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது.

பல ஜென்ம பாவம் விலகும்
வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். நம்முடைய வீட்டில் எந்தப் பொருளையும் இல்லை என்று கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் இதன்மூலம் செல்வம் மேன்மேலும் பெருகும். இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து பார்த்து பலன் கிடைத்தால் எங்களுக்கு எழுதுங்கள். நம்பிக்கையோடு செய்யும் பரிகாரத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications