தை அமாவாசை..முன்னோர்களை வழியனுப்புவோம்..புனித நீராடி தர்ப்பணம் அளித்தால் தடைகள் நீங்கும்!
சென்னை: தை அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. நாளைய தினம் தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி,கோடியக்கரை உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமானோர் பித்ரு தர்பணம் அளிக்க தயாராகி வருகின்றனர். நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை வழியனுப்பி வைப்பது போல பித்ரு லோகம் செல்லும் முன்னோர்களை நாம் தை அமாவாசை நாளில் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும்.

நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் அவசியம்.
அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. புனித தலமான ராமேஸ்வரம் கோவிலில் இன்று முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.
பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. அங்கு சென்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் நீங்கும்.
திருச்சி காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமாகும். தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம்.
அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும். ஆடை தானம் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும். கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம். மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம். தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம். இந்த ஆண்டு சனிக்கிழமையன்று தை அமாவாசை வருகிறது. இந்த தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும்.
கடந்த 6 மாத காலம் நம்முடன் தங்கியிருந்து ஆசி அளித்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் பித்ரு லோகத்திற்கு வழியனுப்பி வைக்கலாம். இதன் சுப காரியத்தடைகள் நீங்கி நன்மைகளும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications