மீனவர்கள்..ஏழை மக்கள் குடியிருப்புகளில் கோவில்கள்..நவீன தொழில் நுட்பம்..திருப்பதி தேவஸ்தானம் முடிவு
திருப்பதி: ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பக்தர்களின் நன்கொடை உதவியுடன் தேவஸ்தான நிர்வாகம் 2068 சிறிய அளவிலான புதிய கோவில்களை இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்டி வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகள், மீனவர் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் புதிய கோவில்களை கட்டுவதுடன், பழைய கோவில்களை சீரமைக்கும் பணியிலும் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாதாரண ஏழை மக்கள் முதல் பல கோடி சொத்து வைத்துள்ள அம்பானி வரைக்கும் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

பல கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதால் இந்தியாவின் பணக்கார கோவிலாக கொண்டாடப்படுகிறது ஏழுமலையான் கோவில். கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கை மட்டும் 1500 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கோவில்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடியாகவும் கிடைத்து வருகிறது. இந்த நன்கொடைகளைக் கொண்டு நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில்கள் கட்டப்படுகின்றன.
இது குறித்து திருப்பதி மலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, "ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பக்தர்களின் நன்கொடை உதவியுடன் தேவஸ்தான நிர்வாகம் 2068 சிறிய அளவிலான புதிய கோவில்களை இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்டி வருகிறது. புதிதாக கட்டப்படும் இந்த கோவில்களின் கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். இது தவிர மிகவும் பழமையான 150 கோவில்களை மறுசீரமைக்க தேவஸ்தான நிர்வாகம் 130 கோடி செலவு செய்து வருகிறது.
இந்த பணிகளுக்கான பணம் விஐபி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் வழங்கும் நன்கொடை பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகள், மீனவர் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் புதிய கோவில்களை கட்டுவதுடன், பழைய கோவில்களை சீரமைக்கும் பணியிலும் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றும் தேவஸ்தான நிர்வாகி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், "தேவஸ்தான நிர்வாகம் மிகவும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தலா பத்தாயிரம் ரூபாயில் ஒரு பகுதி தேவஸ்தான ஊழியர்களின் ஊதியத்திற்கும், மாநில அரசு திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது என்று கூறுவது தவறு.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் கோவில்கள் கட்டப்படும். சமரசட்டா சேவா பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் 32 கோடி செலவில் 360 கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆந்திர மாநில அறநிலையத்துறையின் ஒத்துழைப்புடன் 100 கோடி ரூபாய் செலவில் 932 கோவில்களை கட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் 667 கோவில்களை கட்ட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதிதாக கோவில்களை கட்டுவதற்காக பக்தர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

கடற்படையில் பயன்படுத்துவது போன்ற ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வாங்கி திருப்பதி மலையில் பொருத்த பெல் நிறுவனத்துடன் தேவஸ்தான நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பக்தர்களின் உடைமைகளை கையாளுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பக்தர்களின் உடைமைகளை கையாளும் நடைமுறை இந்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் திருப்பதி மலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 150 கோடி ரூபாய் செலவில் திருப்பதி மலையில் டாட்டா நிறுவனம் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய அருங்காட்சியாகம் ஒன்றை கட்டி கொடுக்க உள்ளது. அதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேவஸ்தானத்தின் 960 சொத்துக்கள் தொடர்பான வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். அந்த சொத்துக்களில் பரப்பளவு 7126 ஏக்கர் ஆகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேவஸ்தானம் வங்கிகளில் 13 ஆயிரத்து 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தது. இப்போது தேவஸ்தானத்தின் வங்கிக் கணக்கில் 15 ஆயிரத்து 938 கோடி ரூபாய் உள்ளது. தேவஸ்தானத்தின் தங்க இருப்பு 7,339 கிலோவில் இருந்து 10,258 கிலோவாக அதிகரித்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர்கள் சரணாலயம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள் வாய்ந்த ஸ்விம்ஸ் மருத்துவமனை, பார்ட் மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றையும் ஏழைகளின் வசதிக்காக தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது என்றும் தர்மா ரெட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications