முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. இனி எதிர்பாராத கதைக்களம்! கண்ணீரோடு பேசிய பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இறுதி கட்டத்தில் வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது என்று அதிகாரப்பூர்வமான ப்ரோமோ இன்று வெளியானதை தொடர்ந்து இந்த சீரியலில் பாக்யாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவாங்க, புலி வருது புலி வருதுன்னு ஏமாத்திட்டே இருப்பாங்க கடைசியில் புலி நிஜமா வந்து நிற்கும்போது அதை யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. அதுபோல தான் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று பல வருடங்களாகவே தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஆனால் அந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லப்பா என்பது போல தான் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்பது இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய குடும்பத்திற்காக படும் அவமானங்கள், உழைப்பு என எல்லாவற்றையும் இந்த சீரியல் சொல்லி இருக்கிறது. தன்னுடைய சுய கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலின் கதாநாயகி தன்னை சுற்றிவரும் சூழ்ச்சிகள் எல்லாம் உடைத்து முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறார்.
இதனாலேயே இந்த சீரியல் பலருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியல் தொடங்கப்பட்டு 5 வருடங்களை கடந்து இருக்கும் நிலையில் வரும் வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, சதீஷ் உட்பட சிலர் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று சொல்லி இருந்தார்கள் ஆனால் எதிர்பார்க்காத கதைக்களம் வந்து சீரியலை தொடர்பு கொண்டு இருந்தனர்.
நடிகை சுசித்ரா வீடியோ
இந்த நிலையில் இப்போது பாக்கியலட்சுமி சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருப்பது அதிகாரப்பூர்வமான ப்ரோமோவில் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா இன்ஸ்டாகிராமில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எமோஷனலாகி கண்கலங்கி இருக்கிறார்.
5 வருடங்களை கடந்து ஒரே சீரியலில் இவர் தொடர்ந்து நடித்து வருவதால் இவருக்கு தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிலர் இவரை ட்ரோல் செய்து கொண்டு இருந்தாலும் கதைக்கு இவர்தான் முக்கிய அங்கமாக இருக்கிறார். இந்த நிலையில் சுசித்ரா லைவில் பேசும் போது ஒரு ரசிகர் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடு என்று வெளியாகும் என்று கேட்டிருந்தார். அதற்கு சுசித்ரா, இந்த சீரியல் வரும் வாரத்துடன் முடிவுக்கு வரப்போகிறது என்று மட்டும் எங்களுக்கு தெரியும். கிளைமேக்ஸ் காட்சிகள் தான் ஷூட்டிங் போய் கொண்டு இருக்கிறது. ஆனால் எப்போது அது டெலிகாஸ்ட் ஆகும் என்று எங்களுக்கு தெரியாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கண் கலங்கிய சுசித்ரா
மேலும் சுசித்ரா பேசும் போது, இந்த சீரியலில் ஐந்து வருடங்களாக நடித்ததால் கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறது . இத்தனை நாட்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பானதற்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் கொடுத்த ஆதரவால்தான் எங்களால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. இதுபோல நான் தொடங்கும் புதிய முயற்சிக்கும் நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கண்கலங்கியபடியே சுசித்ரா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications