திருவண்ணாமலையில் மலை ஏறிய விவகாரம்.. பிக் பாஸ் அர்ச்சனா மீது வனத்துறை நடவடிக்கை! வீடியோவால் வந்த வினை
சென்னை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது வனத்துறை விதித்துள்ள தடை உத்தரவை மீறி மலை ஏறியதாக, பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளரும் சின்னத்திரை நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் அவரது காதலர் அருணும் மலை ஏறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை நடத்தி, இருவருக்கும் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆன்மிகச் சிறப்புமிக்க அண்ணாமலையார் மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் பொதுமக்கள் ஏறுவதற்கு வனத்துறை நிரந்தரமாகத் தடை விதித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் மட்டும், மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

அதுவும் குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் மட்டுமே. மற்ற நாட்களில், வனத்துறையின் முன் அனுமதி இன்றி மலைப்பகுதிக்குள் நுழையவோ, மலை ஏறவோ அனுமதி இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மலை ஏற்றம் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அது பழைய வீடியோ தான், ஆனால் வனத்துறை அனுமதி பெறாமல் அண்ணாமலையார் மலை ஏறி உச்சி வரை சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையேற்ற அனுபவம் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், மலை ஏறி இறங்குவது மிகவும் சிரமமாக இருந்ததாகவும், இருள் சூழ்ந்த நேரத்தில் மிகுந்த அச்சத்தை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "மலையேற்றம் செய்பவர்கள் சீக்கிரமாகவே தொடங்க வேண்டும், சூரியன் மறைவதற்கு முன் இறங்கும் வகையில் திட்டமிட வேண்டும்" என அவர் தனது பதிவில் அட்வைஸ் வழங்கியிருந்தார். இந்த கருத்துகள், வனத்துறை தடை உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் மலை ஏற ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அர்ச்சனாவுடன் அவரது காதலர் அருணும் மலை ஏறியிருந்ததால், இருவரும் சேர்ந்து வனத்துறை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டதை தொடர்ந்து, அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த மலையேற்ற வீடியோக்களையும் புகைப்படங்களையும் உடனடியாக நீக்கினார்.

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருணிடம் விசாரணை நடத்திய தாக கூறப்படுகிறது. விசாரணையின் போது, இருவரும் வனத்துறை அனுமதி இன்றி மலை ஏறியதை ஒப்புக் கொண்டதாகவும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவில், வனத்துறை தடை உத்தரவை மீறியதற்காக அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண் இருவருக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து, கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அபராத விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள் வெளியிடும் பதிவுகள், பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விதிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது. அர்ச்சனா வெளியிட்ட ஒரு வீடியோ, தற்போது அவருக்கே பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications