பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்! முதல் முறையாகக் கணவன்-மனைவி வைல்டு கார்டு என்ட்ரி: இதுதான் புது பிளானாம்!
சென்னை: விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, இரண்டு வாரங்களைக் கடந்து தற்போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சற்று மந்தமாகச் சென்று கொண்டிருந்த இந்தச் சீசன், இப்போதுதான் மெதுவாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், பிக் பாஸ் குழுவினர் அதிரடியாக இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

களத்தில் உள்ள சவால்
பார்வதி, எஃப்.ஜே. வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி உள்ளிட்ட 20 பேருடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். நந்தினிக்கு பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் அவர் வெளியேறிவிட்டார். முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தியும், கடந்த வாரம் அப்சராவும் வெளியேறியுள்ளனர்.
கலாய்ப்பு
உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் ஒருவழியாக ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றாலும், சிலரது சண்டைகள் மற்றும் காமெடிகள் செயற்கையாகத் தெரிவதால், 'மந்தமான சீசன்' என்ற பேச்சு இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான், பிக் பாஸ் குழுவின் அதிரடி முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த சில தினங்களில் நடிகர் பிரஜினும் அவரது மனைவி சாண்ட்ராவும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்தச் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்காது எனவும் ஒரு பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது இரண்டு பேர் அதுவும் கணவர்-மனைவியான இருவர் அனுப்பப்படவிருப்பது ஒருவித ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது.
முன்னோட்டம்
இதற்கு முன் ஒரு சீசனில் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரையும் அனுப்பி வைத்தார்கள். ஆனால், அப்போது இருவருக்கும் இடையில் பிரச்சனை போய்க் கொண்டிருந்தது. ஆனால், இப்போது தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு காதல் ஜோடி, கணவன்-மனைவி போட்டியாளர்களாகச் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
யார் இந்த பிரஜின் - சாண்ட்ரா ஜோடி
தொகுப்பாளர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கிய பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்குப் பரிட்சயமானவர்கள். பிரஜின் தமிழில் தனியார் தொலைக்காட்சிக்கு வந்தபோது தொகுப்பாளராகவே அறிமுகமானார். அவருக்கு அந்த காலத்திலேயே பெண் ரசிகைகள் அதிகம். தொகுப்பாளராக இருந்தவர் பிறகு சீரியல், சினிமா என நகர்ந்தார். சில படங்களில் நடித்தாலும் சினிமா எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை.
சாண்ட்ரா
சாண்ட்ராவும் தொகுப்பாளராகவே தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பிரஜினைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவரும் சீரியல், சினிமா என முயற்சித்தார். சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்காகச் சாண்ட்ரா நடிப்பில் இருந்து சிறிது இடைவெளி எடுத்தார். இந்தத் துறுதுறு ஜோடி இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது, உறவுகளின் சிக்கல்கள், அன்பு, ஈகோ எனப் பலவிதமான உணர்ச்சிகரமானப் போராட்டங்களை வீட்டுக்குள் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'ரியல் லைஃப்' ஜோடியின் வருகை, பிக் பாஸ் 9வது சீசனுக்குப் பெரிய 'பப்ளிசிட்டி'யை அளித்து, அதன் மந்தமான ஓட்டத்தை மாற்றி, ஆட்டத்தை சூடு பிடிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரசிகர்கள் இப்போது, "பிரஜின் - சாண்ட்ரா ஜோடியை வீட்டுக்குள் அனுப்பியதன் நோக்கம், மலையாள பிக் பாஸ் போல் இந்த வீட்டிலும் இன்னொரு ஜோடி உருவாக வேண்டுமா, அல்லது ஏற்கெனவே இருக்கும் ஜோடிகளின் பாசத்தைச் சோதிக்கவா?" என்று கலாய்க்கவும், உற்சாகத்துடன் விவாதிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications