இரண்டாவது கர்ப்பத்தை வித்தியாசமாக அறிவித்த தீபிகா படுகோனே.. மூத்த மகளின் ரியாக்ஷன்
சென்னை: நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க இருக்கிறார்கள் என்று அறிவித்துள்ளனர். அதையும் வித்தியாசமாக அவர்கள் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர் அதை பார்த்ததும் ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஒரு பெரிய செய்தி
இந்த அறிவிப்பை அவர்கள் சாதாரணமாக சொல்லவில்லை. தீபிகா தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் பகிர்ந்தார். அதில் அவர்களின் முதல் குழந்தை "துவா", கர்ப்பத்தை பரிசோதனை செய்யும் கிட்டை கையில் பிடித்திருப்பது போல காட்டப்பட்டது. அந்த புகைப்படத்துடன் எந்த விளக்கமும் இல்லை. ஒரு சின்ன "கண் திருஷ்டி" எமோஜி மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு படம் வெளியானதும் ரசிகர்கள் உடனே அதைப் புரிந்துகொண்டார்கள். "இது இரண்டாவது குழந்தை அறிவிப்பு" என்று கமெண்ட்ஸ் குவிந்தன. சில நிமிடங்களிலேயே அந்த பதிவு வைரலாகி விட்டது.
துவா அக்கா ஆக போகிறார்
ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே தம்பதியருக்கு முதல் குழந்தை 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு "துவா" என்று பெயர் வைத்தனர். துவாவின் வரவு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.இப்போது அதே துவா அக்கா ஆகப் போகிறாள் என்ற செய்தி, ரசிகர்களுக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது."தம்பியா அல்லது தங்கச்சியா?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுகிறது.
காதலாக தொடங்கி குடும்பமாக வளர்ந்த பயணம்
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரின் வாழ்க்கை, சினிமாவில் தொடங்கி குடும்பமாக வளர்ந்த ஒரு பயணம் தான். இவர்கள் முதலில் இணைந்து நடித்தது கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில். அந்த படத்திலேயே இவர்களுக்குள் காதல் தொடங்கியது.
அதன் பிறகு "பாஜிராவ் மஸ்தானி", "பத்மாவத்", "83" போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். பல வருடங்கள் காதலித்து, 2018ஆம் ஆண்டு இத்தாலி லேக் கோமோவில் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணம் ரசிகர்களால் இன்னும் நினைவில் வைத்திருக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
தொழிலும் குடும்பமும்
திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
தீபிகா படுகோன் சமீப காலங்களில் "பதான்", "பைட்டர்", "கல்கி 2898 ஏடி" போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஷாருக் கான் உடன் "கிங்" படத்திலும், அல்லு அர்ஜுன் உடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இவ்வளவு பிஸியான வேலை இருந்தாலும், குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது தான் இவர்களின் சிறப்பாக ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ரசிகர்களின் ரியாக்ஷன்
இந்த செய்தி வெறும் பிரபலங்களின் அறிவிப்பு அல்ல. ஒரு குடும்பம் வளர்ந்து கொண்டிருக்கும் தருணம் என்பதால் அது மக்களுக்கு நெருக்கமாகத் தோன்றுகிறது. காதல், திருமணம், முதல் குழந்தை, இப்போது இரண்டாவது குழந்தை என இந்த முழு பயணத்தையும் ரசிகர்கள் நேரடியாக பார்த்து வந்துள்ளனர். அதனால் தான் இந்த அறிவிப்பு அவர்களுக்கும் ஒரு குடும்ப சந்தோஷம் போல உணரப்படுகிறது.
தமிழில் சூர்யா ஜோதிகா போல இவர்கள் பாலிவுட்டில் க்யூட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இவர்கள் தங்களுடைய சினிமா வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். தீபிகா வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications