பாக்யராஜ் செய்த துரோகத்தை மறக்க முடியாது.. நடு ரோட்டில் கெஞ்சினேன் உதவல! இயக்குநர் சுந்தர்ராஜன் ஆதங்கம்
சென்னை: இயக்குநர் சுந்தர்ராஜன் பேசிய பேட்டி ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial )அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சுந்தர்ராஜன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
ஆர் சுந்தர்ராஜன் திரைத்துறையில் பல முகங்கள் கொண்டவர் என்றாலும், இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு குணச்சித்திர நடிகராகவும், சீரியல் நடிகராகவும் தான் அதிகம் தெரியும். ஆனால் 80-களிலும் 90-களிலும் தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர், பல படங்களில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த திறமையான கலைஞர் என்பதையும் இந்த பேட்டி மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பாக்யராஜ் குறித்து சுந்தர்ராஜன் சொன்ன சம்பவம்
இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் உடனான தனது நட்பு மற்றும் பின்னர் ஏற்பட்ட மனவருத்தத்தை சுந்தர்ராஜன் மிகவும் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: "நானும் பாக்யராஜும் ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி சென்னையில் ஒன்றாகத்தான் அலைந்தோம்.
அந்த நேரத்தில் தான் பாரதிராஜா வந்தார். அவருக்கு ஒரு உதவி இயக்குனர் தேவைப்படறாங்க என்று சொன்னாங்க. உடனே நான் பாக்யராஜ் போகட்டும் என்று சொன்னேன். பாக்யராஜ்க்கு அப்போதே கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும். அதனால் அவர் அந்த பதவிக்கு சரியா இருப்பார் என்று நினைத்தேன்.
அப்போ எல்லாம் 'நான் போகல' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், அடுத்த நாள் காலையில் நான் எழுந்து பார்க்கும் போது என்னிடம் சொல்லாமல் போய்விட்டான். அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
சில வருடங்கள் கழித்து எனக்கு ஒரு லெட்டர் அனுப்பி இருந்தார். 'நீ ஊருக்கு கிளம்பி போ. நான் படம் இயக்க ஆரம்பித்த பிறகு உன்னை கூப்பிடுகிறேன்' என்று எழுதி இருந்தான். அதில் நடு பக்கத்தில் 'நன்றி' என்று மட்டும் எழுதி அவருக்கே திருப்பி அனுப்பி வைத்தேன்.
அதற்கு பிறகு பேசவே இல்லை
பிறகு ஒரு முறை நானும் அவரும் பல நாட்கள் பட்டினியாக நடந்த மவுண்ட் ரோடு ரோட்டில் பென்ஸ் காரில் வந்தான். நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். யார் என்று பார்த்தேன் - பாக்யராஜ். 'என்னை தேனாம்பேட்டையில் இறக்கிவிட்டு விடு' என்று சொன்னேன். 'அதெல்லாம் முடியாது' என்றார். டக்குனு கோபம் வந்தது. பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்தேன்.
நானும் அவனும் வயிற்றுப் பசியோடு அலைந்த மவுண்ட் ரோட்டில், என் கண் முன்பு பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தான். அது அவனுடைய வளர்ச்சி தான்... ஆனா நாம நம்புனவங்களுக்கு துரோகம் பண்ணக் கூடாது. ஏமாற்றக் கூடாது. அதுதான் எனக்கு பெரிய வருத்தம் என்ன சுந்தர்ராஜன் பேசியதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இயக்குனர் சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன் தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரை பதித்தவர். அவர் இயக்கிய படங்களில் கிராமத்து உணர்வு, காதல், குடும்பம், இசை, உணர்ச்சி ஆகியவை இயல்பாக கலந்திருந்தன.
அவர் இயக்கிய முக்கிய ஹிட் படங்களில் வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு, அம்மன் கோவில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, ராஜாதி ராஜா போன்ற படங்கள் பெரிதாக வெற்றி பெற்றது. இந்த படங்களில் குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் அந்த காலத்தில் பெரிதாக பேசப்பட்டது. இசை, காதல், கதாபாத்திர அமைப்பு ஆகியவை இன்று வரை நினைவில் நிற்கின்றன.












Click it and Unblock the Notifications