எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்! கங்கை அமரனுக்கு எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ தெரியலைங்க!
சென்னை: எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது பாடலாசிரியராக கங்கை அமரன் செய்த செயல் அவரது தைரியத்தை காட்டுகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: கங்கை அமரன். திரையுலகில் வியக்க வைக்கும் ஒரு மனிதர் கங்கை அமரன். இதை மட்டுமே செய்வோம் என்றில்லாமல் எதையும் செய்யலாம் என்கிற பாஸிட்டிவிட்டி நிறைந்தவர் அமரன். இளையராஜா வளர்ந்து கொண்டிருந்த பொழுதில் கங்கை அமரனுக்கு எப்படியாவது பாடலாசிரியராக வர வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.

பசிக்கும் போது நோட்டுப்புத்தகங்களில் பாடல்களை எழுதி எழுதி அதை வாசித்து காலத்தை கழித்தவர். பசி முற்றும் போது அந்த நோட்டுப் புத்தகத்தையே எடைக்குப் போட்டு விட்டு தன் வயிற்றை நிரப்பியவர் அமரன். 16 வயதினிலே படத்துக்கு பாடலெழுத கண்ணதாசனை இளையராஜா நினைத்திருக்க பாரதிராஜா தான் "அமர்....நீ எழுதுடா" என ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
அந்த 'செந்தூரப்பூவே' பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது நாடறியும். அப்போது 'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா' என கண்ணதாசனும், படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன்' என வாலியும் தமிழை வைத்து விளையாடிக் கொண்டிருக்க அமரன் ஊதக் காத்தையும், ஜில்லென்ற காற்றையும் இழுத்து வந்து நம்மோடு உலவவிடுவார்.
இந்த கிராமியத் தன்மை அமரனின் பாடல்களில் தவழ்ந்து நம் மனதை தாலாட்டும். சோளம் விதைக்கையிலே சொல்லிப்புட்டு போனப்புள்ளே....சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி....இதை கவிஞர் வாலியோ என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி என எழுதி இருப்பார்.
இதில் சோளம் வெளஞ்சி காத்துக்கிடக்கு என்கிற அமரனின் எழுத்தில் வரும் அப்பாவியின் ஏக்கம் என்னடி மீனாட்சியில் இல்லை தானே. பூவரசம் பூ பாடலில் 'கரகரவண்டி காமாட்சி வண்டி. கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி...' என்கிற கரகரவண்டி என்கிற வார்த்தையில் ரயில் கரகரகர என சப்தத்தோடு போவதாக இருக்கும். நல்ல எதிர்காலத்தை நோக்கி அமரன் தீர்க்கமாக எழுதிய 'ஏதோ நினைவுகள்...கனவுகள்..மனதிலே மலருதே..' என எழுதிக் கொண்டது தனக்காகவே என்றே தோன்றுகிறது.
தாபத்தில் வாழும் பெண்ணின் மனநிலையை 'எண்ணுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது?' என எவ்வளவு அழகாக எழுதி இருப்பார் அமரன். அதை அந்தப்பெண் பாடும் போது 'ஆஹா...அது தான் ஆனந்தம்' என்கிற வார்த்தையில் அப்படியே நாயகியின் தாபத்தின் ஆனந்தத்தை நம் மனதோடு தொட விடுவார்.
ராமச்சந்திரன் ஆட்சி செய்யும் நேரத்தில் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல...ஹோய்' என எழுதக் கூட தனி தில்லு வேண்டும். அமரன் அதையும் எழுதி விமர்சனத்துக்கும் ஆளானார். 'இந்த மான் உந்தன் சொந்த மான்' என எழுதும் போது அந்த மான் மருண்டுபோவது போலவும், அன்னமே ஆஆஆ என ராகத்தில் அன்னம் நகர்ந்து நிமிர்ந்து பார்ப்பதாகவே தோன்றும்.
ஊதக்காத்து வீசயிலே என பாடும் போதே ஊதக்காத்து நம் மீது வீசும் உணர்வை தருவதில் அமரனின் வார்த்தைக்கு தான் முதலிடம். ஒரு அழகான பெண் ராஜ உடைகளில் நகை நட்டுகளோடு நடந்து வரும் போது வரும் நளினம்.... சிறு பொன் மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும்...பாடலிலேயே நளினமாக கண்முன் காட்சி விரியும்.
பாடலாசிரியராக இருக்கும் போதே அந்தப்பக்கம் டப்பிங் குரல் பாக்யராஜுக்கு. புதியவார்ப்புகள் படம் தொடங்கும் போது அமரன் கூட அந்த பள்ளிக்கூட வாத்தியாருக்கு பேசப்பட்டவர் தான். அன்று பாக்யராஜ் தன் முதல்பட ஷுட்டிங்கை விட்டு விட்டு வராதிருந்தால் அமரன் நாயகனாகி இருப்பார். அமரன் வெறும் பின்னணிக் குரலோடு நிறுத்திக் கொண்டார்.
கோழிகூவுது படத்தின் பிரபுவின் யதார்த்தம், எங்க ஊரு பாட்டுக்காரனின் ராமராஜனின் அமைதி இதெல்லாம் அமரனின் வராத நாயகத்தனம் தான். அமரன் நடித்திருந்தால் ராமராஜன் போல் வந்திருப்பார். ஆனால் பாக்யராஜின் குரலாக அமரனின் குரல் எங்கும் ஒலித்தது. இந்த நேரத்தில் கே.ராஜேஷ்வர் சொன்ன ஒரு கதை பிடித்துப்போக அமரன் பாடலாசிரியர், டப்பிங்கிலிருந்து தயாரிப்பில் இறங்கி விடுகிறார்.
ஸ்ரீதரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சந்தானபாரதி, பி.வாசுவை அழைத்து இயக்கும் வாய்ப்பையும் தருகிறார் அமரன். 'பன்னீர் புஷ்பங்கள்' பள்ளிக்காதல் என்கிற ட்ரெண்ட் செட்டராகி இப்போது 96 போன்ற படங்கள் வரை வந்து கொண்டிருக்கிறது. படத்தை தான் தயாரித்தாரென்றால் உடனே இயக்கும் வேலையிலும் இறங்கி முதல் படத்தை வெற்றிப் படமாக்குகிறார் அமரன்.
கோழிகூவுது ஒரு கல்ட் க்ளாசிக். அதில் பிரபு-சில்க் காதலை மிக அழகாக காட்டி இருப்பார் அமர். சில்க் பிரபு மீது வைத்திருக்கும் அன்பு கிடைக்காத போது வரும் ஆற்றாமையை அழகான நடிப்பின் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார். 'பொட்டப்புள்ள எல்லோருக்கும்' பாடல் தான் சில்க்கின் பெஸ்ட் பாடல் என்பேன்.
என்ன ஒரு நளினமான நடிப்பு... தொடர்ந்து படங்கள் இயக்கும் போதே இசையமைக்கவும் இறங்கி விட்ட அமரன் வாழ்வே மாயம் படப்பாடல்கள் மூலம் ராஜா ரசிகர்களின் மூக்கில் விரல் வைக்க வைத்தவர். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்கிற சொல்லுக்கு உதாரணம் அமரன்.
சட்டம் படத்தில் 'ஒரு நண்பனின் கதையிது' பாடல் போல ஒரு மெலடி, சோகம் ராஜாப்பாடலுக்கு இணையான ராகம்... இதோடு அமரனின் குரல் பிடித்தமான ஒன்று...'வாடி...என் பொண்டாட்டி நீதானே....' என இழுக்கும் அமரனின் குரல் நம் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும். 'சோலைப் புஷ்பங்களே' பாடலின் சோகம் அமரனின் குரல் அழகாக காதலின் வலியை நமக்குணர்த்தும் ஊடகம்.
'வடக்குத்தெரு வண்ணக்கிளி' என்கிற குரல் பாலு, வாசு என கட்டிக்குரலுக்குள் நடுங்கும் குரலாக வந்தது தனித்தன்மையாக இருந்தது. 'மச்சானை வச்சுக்கடி' போன்ற அதிரடியோடு 'பூஜைக்கேத்த பூவிது' போன்ற மெலடியும் கூட அமரனால் அழகான பாடல். இப்படி இசை, பாடகர் என அதையும் விடவில்லை அமரன்.
கங்கை நதி ஒரே மாநிலத்தில் ஓடும் வைகை நதி போல அல்ல. அது பல பிரதேசங்களை கடந்து வருவது போல அமர் எப்படி கங்கை அமரன் எனப்பெயர் வைத்துக்கொண்டாரோ அதைப்போலவே பல திறமைகளையும் தொட்டுவிட்டு, ஜெயித்து விட்டு வந்து விட்டவராக மாறினார்.
அது கூட அவருக்கு மைனஸாக மாறியதோ என்னவோ தமிழ் சினிமாவில் கங்கை அமரன் என்றால் தெரியும். ஆனால் ஏற்றெடுத்த துறைகளில் வீச்சாக ஒரு பெயரை எட்ட முடியாமல் போனது. இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டிய கலைஞன் அமரன். இளையராஜா என்கிற சூரியன் அமரன் என்கிற நிலவை மறைத்து விட்டதாகவே தோன்றுகிறது.
ஊதக்காத்து வீசும், சாமக்கோழி கூவும் நேரங்களில், கயிற்றுக்கட்டிலில் படுத்து ரேடியோவில் இரவுப்பாடல்கள் கேட்கும் வழக்கம் தமிழக கிராமங்களில் இருந்தது. அதில் ஏதாவது ஒரு விதத்திலாவது தமிழன் வானத்தில் ஒரு நிலாவை பார்த்தான். நிச்சயம் அது அமர் தான் என சொல்லவும் வேண்டுமா? என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications