ரவி மோகன் மனைவி ஆர்த்தி கோபத்தில் வெளியிட்ட அறிக்கை.. கெனிஷா கொடுத்த பதில் பதிவு! பஞ்சாயத்து முடியாது போல
சென்னை: நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழியான கெனிஷாவுடன் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் பிரீத்தா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் ட்ரெண்டானதை தொடுத்து மாலையில் ரவி மோகன் மனைவி ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ரவி மோகனின் தோழி கெனிஷா அதற்கு பதில் கொடுக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் கை கோர்த்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

ஆர்த்தி ரவி இன்ஸ்ட்டா பதிவு
ஆனால் கடந்த வருடத்தில் ஆர்த்தி உடனான திருமண பந்தத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார். பிறகு விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். ஆனால் ஆர்த்தி நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ரவி மோகன் கெனிஷா உடன் திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டது குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு வருடம் ஆக நான் மௌனமாக இருந்து வருகிறேன், அதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பதல்ல.
பதிவுக்கு காரணம்
என் பேச்சை விட என்னுடைய குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிக முக்கியமாக என்று கருதியதால் தான் அந்த விரதம் இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பழி சொற்கள் அனைத்தையும் மௌனமாக தாங்கிக் கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நாம் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவர்களிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வந்து விடக்கூடாது என்பதால் தான்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு. நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு, எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும் நம்பிக்கையுடன் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கை உதறி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்த குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன்.
குழந்தைகளின் கண்ணீர்
யாரும் அறியாமல் அந்த குழந்தைகள் சிந்தும் கண்ணீரை என் கைகள் தான் துடைத்து கொண்டிருக்கிறது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்போது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதி பறந்து விட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்போது அனைத்தும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்போதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன்.
ஆனால் கணக்கு போட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன். இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான் தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு 10 மற்றும் 14 வயதாகிறது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு உறுதியும் மிக முக்கியம். இன்று நடந்து கொண்டிருக்கும் சட்ட விவகாரங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
போலி வாக்குறுதி
எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது. இன்று நான் ஒரு மனைவியாகவோ அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்யாமல் இருந்தால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும்.
இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவு மட்டும் அல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று நீங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் எங்கள் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பெயர் மாறவில்லை
என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவி சாய்த்து தான் ஆக வேண்டும். எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலம் விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக் கொள்பவர்களுக்கும் ஒன்று இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில் தான் உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அந்தப் பெயரிலே நீடிக்கும்.
இன்னும் மனைவி தான்
அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம். அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்போதும் பழிவாங்கவோ, பரபரப்புக்காகவோ நான் பேசவில்லை. என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன் என்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இரு மகன்களுக்காக என் கண்ணீரையும் கதறலையும் கசப்பான அனுபவங்களையும் மறைத்துக் கொண்டு எழுதுகிறேன் என்று அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறி இருக்கிறார்.
கெனிஷா பதிவு
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு ஸ்டோரியில் "தற்போதைய நிலையில் திருப்தி அடையாதவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல இன்னொரு பதிவில், இதை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறிக்கொண்டு, "நீங்கள் காணாததை நம்பும்போது கண்டதை கட்டளை இடுகிறீர்கள். இதை நம்புங்கள்" என்றும் கூறியிருக்கிறார். ஆர்த்திக்கு பதிலாக தான் கெனிஷா இப்படி பதில் கொடுத்து இருக்கிறார் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. நீங்கள் கெனிஷாவின் பதிலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications