புற்றுநோயால் பாதிக்கப்பட்ட “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு.. குவியும் ஆறுதல்
சென்னை: பாலிமர் தொலைக்காட்சியில் ஹிந்தி டப்பிங் சீரியலான "மூன்று முடிச்சு" சீரியலின் கதாநாயகியாக நடித்த நடிகை தீபிகா தான் இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வார காலமாக என்ன நடந்தது என்று அந்த பதிவில் உருக்கமாக தீபிகா பகிர்ந்து இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு டப்பிங் சீரியல் மோகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஹிந்தி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தன. இந்த சீரியல் பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் இருந்ததால் இந்த சீரியல் விஜய் டிவி, பாலிமர், ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தது. அதிலும் பாலிமர் சேனலில் ஒளிபரப்பான மூன்று முடிச்சு சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு.

புற்றுநோய் பாதித்த நடிகைகள்
இந்த சீரியலின் கதைப்படி அக்கா தங்கை இருவருடைய பாசம் மற்றும் நட்பு இருவருடைய குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியே இந்த சீரியலின் கதை இருந்தது. பல வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் அக்காவாக நடித்த நடிகை தீபிகா தான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். பல நடிகைகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் வந்திருக்கிறார்கள். நடிகை மனிஷா கொய்ராலா, கௌதமி போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் எப்படி இந்த புற்றுநோயுடன் போராடி மீண்டும் வந்தோம் என்று பல இடங்களில் பேசி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர்
இந்த வரிசையில் இப்போது பாலிவுட் சின்னத்திரை நடிகையான தீபிகாவும் இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். மூன்று முடிச்சு சீரியல் இந்தியில் சசுரால் சிமக்கா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் மூலம் பிரபலம் அடைந்த தீபிகா ஹிந்தி பிக் பாஸின் 12வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலும் வெற்றி பெற்றிருந்தார்.
கணவர் கொடுத்த விளக்கம்
அதுபோல மூன்று முடிச்சு சீரியலில் தனக்கு கணவராக நடித்த ஷாயிப் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது தான் இவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று அவரது கணவர் நடிகர் ஷாயிப் இப்ராகிம் தன்னுடைய youtube சேனலில் இந்த தகவலை பகிர்ந்து இருந்தார்.

நடிகை தீபிகா பதிவு
தீபிகா தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியதும் நோய் வாய் பட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் இந்த சூழலை தைரியமாக எதிர் கொண்டு வெளி வருவேன் என்று கூறி இருக்கிறார். அதோடு "கடந்த சில வாரங்கள் எங்களுக்கு மிகவும் கடினமான நாட்களாக இருந்தன என்பது உங்களுக்கு தெரியும். என் வயிற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட வலிக்காக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டறிந்தோம்.
பாசிட்டிவ் எண்ணம்
பின்னர் இது இரண்டாம் நிலையில் இருப்பதை தெரிந்து கொண்டோம். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான காலங்களில் இதுவும் ஒன்றாகும். நான் நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறேன். இதிலிருந்து தைரியமாக மீண்டும் வெளிவருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னுடைய முழு குடும்பமும் என் பக்கத்தில் இருப்பதால் உங்கள் அனைவரின் அன்பும் பிரார்த்தனைகளால் இதை நான் கடந்து செல்வேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். இவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து தீபிகா மீண்டு வர வேண்டும் என்று நாமும் வேண்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications