ஓடிடியில் கவனம் பெறும் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன்.. படத்தை பார்த்து இயக்குனர் சங்கர் ஓபனா சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் 25வது படமாக, இயக்குநர் அருண் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'சக்தி திருமகன்' திரைப்படம், திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்தத் திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரே இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளியிருப்பது, இந்த அரசியல் த்ரில்லர் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது!

அருண் பிரபுவின் தரமான அரசியல் படைப்பு
'அருவி', 'வாழ்' போன்றப் படங்களை இயக்கி கோலிவுட் திரையுலகில் தனி கவனம் ஈர்த்தவர் அருண் பிரபு. அவரது தரமான அரசியல் படைப்பாக 'சக்தி திருமகன்' உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, திரிப்தி ரவீந்திரா, வாகை சந்திரசேகர், செல் முருகன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஜென்டில்மேன் Vs சமூக நீதி
சமூக நீதி மற்றும் அரசியல் குறித்தக் கேள்விகளைத் துணிச்சலாக எழுப்பிய 'சக்தி திருமகன்' படத்தின் கதைக்களம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பழங்குடியினத்தைச் சார்ந்த தனது தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதால், பெரியாரியச் சிந்தனை கொண்ட வாகை சந்திரசேகரால் விஜய் ஆண்டனி வளர்க்கப்படுகிறார். சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளுடன் வளரும் அவர், வளர்ந்து பெரியவர் ஆனதும் பணக்காரர்களிடம் இருந்து பணத்தைத் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறார்.
அரசியல் பார்வை
இந்தக் கதைக்களம் கிட்டத்தட்ட ஷங்கரின் 'ஜென்டில்மேன்' சாயலில் இருந்தாலும், இன்றைய காலகட்டத்தின் அரசியல் தலைவர்களைப் பிரதிபலிக்கும் விதமாகவும், சமூக நீதிக் கொள்கைகளைத் தீவிரமாகக் கேள்வியெழுப்பும் வகையிலும் பரபரப்பானக் கதையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த படம் ஓடிடி-யில் வெளியான பிறகு ரசிகர்கள் அளித்த விமர்சனத்தில், "முதல் பாதி பரபரப்பானத் திரைக்கதையாக நகர்ந்து வரும்போது, இரண்டாம் பாதியிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், இது ஒரு தரமானப் படைப்பாக வந்திருக்கும்" என்று கூறியிருக்கின்றனர். ஆனாலும், அரசியல் த்ரில்லராகப் பலரிடமும் இது கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் ஷங்கரின் பாராட்டு
சமீப காலமாகத் திரைக்கு வரும் புதிய படங்களைப் பார்த்துப் பாராட்டுத் தெரிவிக்கும் இயக்குநர் ஷங்கர், 'சக்தி திருமகன்' குறித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சக்தி திருமகன் படத்தை ஓடிடியில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநர் எழுப்பிய கேள்விகள் கவனிக்கத் தக்கதாகவும், நியாயமான ஒன்றாகவும் இருந்தது. சிந்தனையைத் தூண்டும் படம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநருக்கு பாராட்டு
மேலும், "ஒரே படத்தில் பல பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். எதிர்பாராத விதத்தில் கதைக்களம் தீவிரமடைந்து கொண்டே இருந்தது. இயக்குநர் அருண் பிரபுவுக்கு ஹாட்ஸ் ஆஃப்!" என்றும் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தியேட்டர்களில் பெரியளவில் கவனத்தை ஈர்க்காத 'சக்தி திருமகன்', தற்போது ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு ரசிகர்கள் மற்றும் சினிமாப் பிரபலங்கள் மத்தியில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு, ஒரு அரசியல் த்ரில்லருக்கானச் சரியான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications