சொன்னா கேட்க மாட்டியா? ஒழுங்கா உள்ளே போ! ‘கொம்பன்’ யானையை மிரட்டிய வன ஊழியர்! அப்படியே கேக்குதுங்க!
திருவனந்தபுரம் : "போடா இங்கே நிக்காதே நீ நிற்பதினால் எல்லாரும் பயப்படுறாங்க.. காட்டுக்குள்ள போடா. என்ற வனத்துறை ஊழியரின் பேச்சைக் கேட்டு மீண்டும் காட்டுக்குள் சென்ற கொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானை குறித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மனிதர்கள் பழக்கப்படுத்தி வளர்க்கும் உயிரினங்களில் மிகவும் பிரம்மாண்டமானது என்றால் அது யானைகள் தான். ஆதி காலங்களில் இருந்தே யானைகளை பழக்கப்படுத்தி தங்கள் வேலைகளை செய்ய வைத்திருக்கிறார்கள் மனிதர்கள்.
வன சூழியலைப் பொறுத்தவரை யானைகளின் பங்கு மகத்தானது. ஒரு யானைக் கூட்டம் ஒரு பகுதியை கடந்து செல்கிறது என்றால் அங்கு ஒரு வனப்பகுதி உருவாகிறது என்று அர்த்தம். அந்த அளவு யானைகள் வனவிலங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

யானைகள்
அதே நேரத்தில் சிறியவர்கள் மூதல் பெரியவர்கள் வரை யானைகளை பிடிக்காதவர்களும் இருக்க முடியாது. பல நேரங்களில் சுட்டித் தனமாகவும், சில நேரங்களில் ஆத்திரமாகவும் நடந்து கொள்ளும் யானைகளை பார்த்தாலே பலருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். வளர்ப்பு யானைகள் மட்டுமல்லாது காட்டுயானைகளும் பலருக்கும் ஃபேவரைட்டாக உள்ளன. கோவை சின்னத்தம்பி உள்ளிட்ட காட்டு யானைகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.

மூனாறின் செல்லப்பிள்ளை
அந்த வகையில் மூணாறு பகுதியின் செல்லப்பிள்ளை இந்த முறிந்த வால் கொம்பன் காட்டு யானை. சாலையை மறித்து நின்ற இந்த யானையை போடா இங்கே நிக்காதே நீ நிற்பதினால் எல்லாரும் பயப்படுறாங்க.. காட்டுக்குள்ள போடா.. என்ற வனத்துறை ஊழியரின் பேச்சைக் கேட்டு மீண்டும் காட்டுக்குள் சென்ற வீடியோ தான் தற்போது கேரளாவில் ட்ரெண்டிங் வீடியோக்களில் ஒன்றாக உள்ளது.

முறிந்த வால் கொம்பன்
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது முறிந்த வால் கொம்பன் சாலையின் நடுவே நிற்பதும் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதுமாக இருந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் கொம்பன் வழக்கம் போல வனப்பகுதியை விட்டு சாலையில் நின்று கொண்டிருந்தது இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது.

பேச்சைக் கேட்கும் வீடியோ
இந்த நிலையில் அந்த வழியாக வந்த வனத்துறை ஊழியர் சக்திவேல் தனது இரு சக்கர வாகனத்தில் நேரடியாக யானை அருகே சென்று கொம்பன் இடம் போடா இங்கே நிக்காத இங்கு உனக்கு என்ன வேலை நீ நிற்கிறதால எல்லாம் பயப்படுறாங்க போடா காட்டுக்குள்ள போடா என கூறியதை அடுத்து அதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக கொம்பன் காட்டு யானை சாலையை விட்டு அருகே உள்ள ஏலத் தோட்டத்தில் மேடான பகுதியில் ஏற முடியாமல் ஏறிச் சென்று பின்னர் வனப்பகுதிக்கு சென்று விட்டது. யானை சென்ற பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. தற்போது இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications