கேரளாவில் ‘அக்கவுண்ட்' திறந்த பாஜக.. ராஜீவ் சந்திசேகர் உள்பட 3 பேர் அமோக வெற்றி.. லிஸ்ட் இதோ
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக அக்கவுண்ட் திறந்துள்ளது. 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்பட மொத்தம் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. கேரளாவில் தற்போது பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அக்கவுண்ட்டை திறக்க வேண்டும் என்று பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்நிலையில் தான் இன்று கேரளாவில் பாஜகவில் முதல் ஆளாக வெற்றி பெற்றுள்ளார் பிபி கோபகுமார். இவர் கொல்லம் மாவட்டம் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் வெற்றியை பதிவு செய்துள்ளார். பிபி கோபகுமார் மொத்தம் 51,923 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜேந்திரன் 47,525 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 4,398 ஆகும். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுராஜ் ரவி 35,276 ஓட்டுகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதேபோல் காலக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த முரளிதரன் பாஜக சார்பில் 46,564 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடகம்பள்ளி சுரேந்திரன் 46,136 ஓட்டுகள் வாங்கி தோல்வியை சந்தித்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 428 ஆகும். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரத்சந்திர பிரசாத் 37,183 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மேலும் மாஜி மத்திய அமைச்சரும், கேரளா மாநில பாஜக தலைவராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் மாவட்டம் நிமோம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். நிமோம் தொகுதியில் ராஜீவ் சந்திரசேகர் 55,586 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் சிவன்குட்டி 51,067 ஓட்டுகள் பெற்று தோல்வியை சந்தித்தார். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 4,519 வாக்குகளாகும். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சபரிநாதன் 29,043 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார்.
கேரளாவை எடுத்து கொண்டால் பாஜகவுக்கு செல்வாக்கு என்பது கிடையாது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ராஜீவ் சந்திரசேகர் வென்ற நிமோம் தொகுதியில் பாஜக சார்பில் ஓ ராஜகோபால் வெற்றி பெற்றார். இவர் தான் கேரளா வரலாற்றில் முதல் பாஜக எம்எல்ஏ ஆவார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் கேரளாவில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications