அடி தூள்! அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கட்டாயம் - கேரள அரசு 'வாவ்' அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, கேரள அரசும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கேரள அரசின் இந்த அறிவிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இயற்கை தந்த 'சவால்'
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியிலான அவஸ்தை காரணமாக பணியிடங்களில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தேவையென்றால் சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களின் நிலைமைதான் பரிதாபம். என்ன வலி இருந்தாலும், வெளியே சொல்ல முடியாமல் அவர்கள் வேலையை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

நீண்டகால கோரிக்கை
எனவே, இந்த மாதவிடாய் காலத்தில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும், பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு வருகை பதிவேட்டுடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுபெறத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் மிகச் சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளன.

'மாஸ்' காட்டிய கொச்சி பல்கலைக்கழகம்
இந்த சூழலில்தான், கேரளாவில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதாவது, வருகைப் பதிவில் 2 சதவீதத்தை மாதவிடாய் விடுமுறைக்காக மாணவிகள் எடுத்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, அந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 75 சதவீதம் 'அட்டென்டென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்றால், மாணவிகளுக்கு 73 சதவீதம் இருந்தால் போதுமானது.

கேரள அரசும் அறிவிப்பு
இந்நிலையில், கொச்சி பல்கலைக்கழகத்தை முன்னுதாரணமாக வைத்து, கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து அம்மாநில உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறையையும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து வெளியிட்ட உத்தரவில், "கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் கர்ப்பிணிகள் ஆண்டுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறையும் எடுத்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பு கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications