ஒன்னுமே இல்ல.. எதுக்குயா மூடனும்! கடுப்பான விஸ்வா! ’படுத்திருக்கும்’ போதே பெட்டோடு தூக்கிய போலீஸ்..!
திருவனந்தபுரம் : கேரளாவில் திருட சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், விரக்தியில் கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடனின் குறிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அத்திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ,குந்நங்குளம் என்னும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் திருடன் ஒருவன் கடந்த 10-ம் தேதி திருட முயன்றுள்ளார்.
இதில் இரண்டு கடைகளிலிருந்து திருடிய திருடன் பணத்துடன் பக்கத்தில் இருந்த ஆண்களுக்கான ஆடை கடையில் திருட கடையின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

கடையில் திருடன்
கடையில் உள்ள கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் திருடவும் எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் ஒரு ஜோடி ஆடையை மட்டும் எடுத்து விட்டு உடைக்கப்பட்ட கதவின் கண்ணாடி துண்டில் "கடைக்குள் எதுவும் இல்லை என்றால் எதற்காக கடையை மூடினாய், கண்ணாடிக் கதவாச்சும் தப்பித்து இருக்கும்" என கடைக்காரருக்கு குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

போலீசார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பேட்டா போலீசார் கடையின் சிசிடிவி காட்சிகளையும் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் திருடன் வயநாடு, களிப்பறம்பு பகுதியை சார்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை
விசாரணையில் கேரளா முழுவதுமாக பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் விஸ்வராஜ் வயநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிரடி கைது
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருடன் விஸ்வராஜ்-யை மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கண்ணாடி துண்டில் கடைக்காரருக்கு திருடன் எழுதிவைத்த குறிப்பு தற்போது இணையதளங்களிலும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications