Tenkasi: தென்காசியில் தெரித்து ஓடிய பக்தர்கள்.. பாய்ந்த வந்த கரடி! அத்ரி மலை கோரக்கநாதர் கோயிலில் பரபரப்பு
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் அத்ரி கோரக்கநாதர் மலைக்கோயில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வந்த பக்தர்களை கரடி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே கடனா அணையை ஒட்டிய பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றால் அங்கே அத்ரி மலை கோரக்கநாதர் திருக்கோயிலை காண முடியும். மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்த்தியான பகுதிகளில் இந்த கோயில் அமைந்திருப்பதால் இயல்பாகவே இப்பகுதியில் வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இங்கு சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்ததாக செவி வழி கதைகள் இருக்கின்றன. எனவே அமைதியை விரும்புவோர் இந்த மலை கோயிலுக்கு பயணம் செய்வது உண்டு. அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.
பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள் ஈடேறுகின்றன என பக்தர்கள் நம்புகின்றனர். பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.
ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது.
இந்நிலையில் இன்று பக்தர்கள் மலைக்கு வந்திருந்த நிலையில் கரடி ஒன்று அவர்களை தாக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், கோயிலை சுற்றி இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இது பாதுகாப்பு கவசம் போல வன விலங்குகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்றி வருகிறது. அப்படித்தான் கரடியையும் இந்த தடுப்பு கம்பிகள் காப்பாற்றியுள்ளன.
பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அச்சப்படாமல், அவர்கள் பொறுமையாக இருந்திருக்கின்றனர். கரடி இரும்பு தடுப்பை தாண்டி பக்தர்களை தாக்க முயன்றிருக்கிறது. ஆனால் முடியாது என்று தெரிந்ததால் அது வந்த வழியே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இருப்பினும் பக்தர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புலி, சிறுத்தைகள் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆபத்தான விலங்காக அறியப்பட்டாலும், கரடிகள் இதை விட ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் புலி, சிறுத்தை தாக்குதலிலிருந்து தப்பினால் காயங்கள் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். ஆனால், கரடி ஏற்படுத்தும் காயங்கள் எளிதாக குணமடையாது. கரடியின் நகங்களில் அழுக்குகள் நிறைய இருக்கும். எனவே இது தொற்று பாதிப்பை ஏற்படுத்தி காயம் குணமாவது தாமதமாகும்.












Click it and Unblock the Notifications