கடைசியில் எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்கு பாருங்க.. பெங்களூர் பெண் போட்ட "ஏசி" பதிவு
பெங்களூர்: பெங்களூர் நகரத்தில் உள்ளவர்கள் ஏசி கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது உள்ள வெப்பத்தை பார்த்து ஏசி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருப்பார்கள்.. இதனிடையே பெங்களூர் பெண், கோடையின் உக்கிரத்தை தனது ஏசி மூலம் விளக்கி உள்ளார். அந்த பதிவின் கீழ் பலரும் விவாதித்து வருகிறார்கள்.
இந்தியாவின் மிகவும் அழகான நகரங்களில் பெங்களூர் மாநகரமும் ஒன்று.. கடல் மட்டத்தில் இருந்து 920 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதியாகும்.. அதேநேரம் பெங்களூர் மலை வாசஸ்தலப்பகுதியும் அல்ல.. கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடையே உள்ள உயரமான பகுதியாகும். ஒரு காலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மரங்களே இருக்கும். பெங்களூர் நகரம் குளுகுளுவென இருக்க மரங்கள் முக்கிய காரணமாக இருந்து.. சென்னையில் உள்ள வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பெங்களூர் நகருக்கு தப்பி சென்ற பெரிய வரலாறுகள் உள்ளது.

ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளுகுளுவென இருக்கும். ஏசியே பெங்களூர் நகருக்கு தேவைப்படாது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு மட்டுமே சற்று வெப்பமாக இருக்கும். அதற்கும் மின் விசிறியே போதுமானதாக இருந்தது.. அமெரிக்காவின் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மிகவும் தேடிப்போய் கம்பெனிகளை வைக்க பெங்களூர் நகரின் தட்ப வெப்பநிலையும் முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் இப்போது பெங்களூர் நகரம் தனது அழகில் பாதியை இழந்துவிட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் வானுயர்ந்த கட்டிடங்கள் முளைத்துவிட்டன. பல காடுகள் காணாமல் போய், வீடுகளாகிவிட்டன. வெறும் 25 வருடங்களில் பெங்களூர் நகரம் சந்தித்தது அசாதாரணமான வளர்ச்சியாகும். இந்தியாவின் மற்ற பெருநகரங்கள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு பெங்களூர் வளர்ந்துவிட்டது. பெங்களூர் அதற்காக இழந்த இயற்கை வளங்கள் ஏராளம்..
தண்ணீர் பற்றாக்குறையை பெரும்பாலும் சந்திக்காமல் இருந்து வந்த பெங்களூர் மக்கள், கடும் வறட்சியை எதிர்கொண்டார்கள். பல நாட்கள் மழை பெய்யாமல் இயற்கை கண்ணீர் விட வைத்தது. டேங்கர் லாரிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் பிறந்தால் தான், பெங்களூர் நகரம் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுஒரு பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில். வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இது பெங்களூர் தானா அல்லது வேலூரா என்று கேட்கும் அளவிற்கு வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்கமும் ஏற்பட்டுள்ளது.. இதனால் பல பெங்களூர்வாசிகள், ஏசி வாங்கி மாட்டி வருகிறார்கள். இந்த வெப்பத்திற்கு ஏர் கூலர் கூட போதாது ஏசி தான் தீர்வு என்று ஏசி கடைகளில் குவிந்து வருகிறார்கள்..

இந்நிலையில் பெங்களூர் நகரின் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பிரேரனா என்ற பெண், தனது படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யின் படத்தை பகிர்ந்து செய்துள்ள பதிவு எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூருவில் வசித்து வரும் எங்களுக்கு ஏ.சி. தேவை என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை.
ஏனென்றால் அப்போது எல்லாம் எங்கள் பெங்களூர் இதமான வானிலையுடன் இருந்தது. ஆனால் தற்போது ராஜஸ்தானில் தங்கி இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் முந்தைய ஆண்டை விட தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரிய அளவில் வைரலாகி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், கடந்த 2016ல் நான் ஏர்கூலர் வாங்கி இருந்தேன்.. அதை அதன்பிறகு பயன்படுத்தியதே இல்லை.. ஆனால் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கி உள்ளேன் என்றார். அதற்கு பதில் அளித்துள்ள பிரேரணா, ஏர் கூலர் என் வீட்டிலும் இருக்கிறது. ஆனால் இந்த வெப்பத்திற்கு ஏர் கூலர் போதவில்லை.-ஏசி தான் சரியாக உள்ளது என்றார்.
இன்னொரு நெட்சடின் பெங்களூர் நகரம் 1973ஐ ஒப்பிடும் போது 1073 சதவீதம் அளவிற்கு நகரமயமாகி வளர்ந்துள்ளது.. பெங்களூர் நகரில் மொத்தம் உள்ள 95 லட்சம் மக்களுக்கு 15 லட்சம் மரங்களே உள்ளன. ஒவ்வொரு 7 பேருக்கு ஒரு மரம் என்கிற அளவில் தான் தற்போது மரங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார். எப்படி இருந்த கார்டன் சிட்டியை, எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாருங்க!












Click it and Unblock the Notifications