கனமழை எதிரொலி! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு
சிதம்பரம்: இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அது போல் அந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளிலும் இன்று பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 27ஆம் தேதி அன்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்ட பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின்னர் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 30-ம் தேதி) கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கின்றபோது, பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில், டெல்டா மாவட்டங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. நவ.29-ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவ.30-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 29 மாலை முதல் நவம்பர் 30-ம் தேதி மதியம் வரை, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் நவ.30-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் நேற்று இரவு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications