தென்னிந்தியா பக்கம் திரும்பும் பருவமழை! கொட்டும் கனமழையால் ஸ்தம்பிக்கும் தெலுங்கானா! ரொம்ப மோசம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அங்குள்ள பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து இந்த தொடர்ந்து மழையால் அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை வைத்துச் செய்து வருகிறது. டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் எனப் பல இடங்களில் கனமழை கொட்டியது.
குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவையும் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த பருவமழை அப்படியே மெல்லத் தென்னிந்தியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.

கனமழை: தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் அங்குக் கொட்டிய மழையைப் பார்த்தால் இதை விடவே மிக மோசமாக மழை கொட்டி தீர்த்ததாகவே தெரிகிறது. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் வரலாறு காணாத மழை தெலுங்கானாவில் கொட்டியது.
அங்கு வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஏற்பட்ட காற்றின் சுழல் காரணமாகவே மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. குறிப்பாகக் கடந்த புதன்கிழமை காலை அங்கே மெகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழையால் முலுகு மற்றும் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் பல கிராமங்களின் வழித்தடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை: இதையடுத்து அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை மூலமாக மக்களை அணுக முடியாத நிலையில், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர். முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று மழை குறைந்த போதிலும், நிலைமை இன்னும் பல இடங்களில் மோசமாகவே இருக்கிறது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை முதல் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை. அதேநேரம் வாரங்கல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் படகுகள் அனுப்பப்பட்டன. இதுவரை, வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் போலீசார் 50 பேரை மீட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்: தெலுங்கானாவில் நிலவும் வெள்ள பாதிப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பேசினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தெலுங்கானா மக்களைப் பாதுகாக்க அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். இப்போது 2 ஹெலிகாப்டர்கள், 5 NDRF குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்
தெலுங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் கிட்டதட்ட இதே நிலை தான். அங்கு மும்பையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் நிலையில்.. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அங்கு மும்பை மற்றும் அண்டை மாவட்டமான ராய்காட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரித்தது. இன்றைய தினம் மும்பைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications