வெந்து தணிந்த தமிழ்நாடு.. சென்னை டூ தூத்துக்குடி கண்கவர் மேகக் கூட்டங்கள்.. அடியோடு மாறிய வானிலை
சென்னை: எல் நினோ வில்லனால் வெந்து வந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், நேற்றுடன் அந்த தொல்லையில் இருந்து விடுதலையாகி உள்ளனர். இன்று சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் வானிலை அடியோடு மாறியிருக்கிறது. பெரிய அளவில் எங்கும் மழை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும், லேசான தூரல் மழை மற்றும் சில இடங்களில் மிதமான மழை என்று மாறியதுடன், வெயிலுக்கு பிரேக் போட்டிருக்கிறது மேகங்கள். அடைமழைக்காலத்தின் ஆரம்ப நாளாக இன்று சென்னைக்கு தொடங்கி உள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையை தென்மேற்கு பருவ மழை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. சென்னையைவிட சென்னையின் நீர் பிடிப்பு பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தென்மேற்கு பருவ மழை மோசமாக ஏமாற்றிவிட்டது. வெயில் காலம் போல் வெப்பநிலை வாட்டி வதைத்து வந்தது.. இன்று வெப்பநிலையே அடியோடு குறைந்துள்ளது. அடைமழைக்காலம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்றே வானிலை அடியோடு மாறிவிட்டது.

சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் லேசான மழை ஆங்காங்கே பெய்திருக்கிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்திருக்கிறது. மழை தற்போது இல்லை என்றாலும் , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்கிற அளவிற்கு காலநிலை மாறி உள்ளது. குளுகுளுவென காற்றடிக்கிறது. அடைமழைக்காலம் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி இன்று தெரிய தொடங்கி உள்ளது. ஐப்பசி பிறந்தால் அடைமழை பெய்யும் என்பார்கள். அதற்காக சென்னை மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த மழை சென்னைக்கு மிக அவசியம். ஏனெனில் சென்னையை சுற்றியுள்ள எந்த குடிநீர் ஏரியிலும் தண்ணீர் இல்லை.. மிகமிக குறைவாவே தண்ணீர் சில ஏரிக்களில் இருக்கிறது. குடிநீருக்கே மழை பெய்தால் தான் சாத்தியம். அதேபோல் பல வீடுகளில் போர்களில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது.இப்போது நல்ல மழை பெய்யாமல் போனால், அடுத்த கோடையில் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சென்னை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
நல்ல வேளையாக வானிலை கணிப்புகளின் படி, இந்த ஆண்டு சென்னை சுற்றுவட்டாரங்களில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மழைய வரவேற்போம். தற்போதைய நிலையில் திருச்சிராப்பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர் மாவட்டத்தை நோக்கி மழைப் பட்டைகள் நெருங்கி வருகின்றன. மழை மேகங்கள் கிழக்கு முதல் மேற்கு நோக்கி நகர்கின்றன. இதற்கிடையில், தென் தமிழகத்தில் உள்ள இராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சுற்றி ஆங்காங்கே மழை பெய்யும் என்று வானிலை ஆர்வர்கள் கணித்துள்ளனர்.
இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், " சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை கண்கவர் மேகக் கூட்டங்கள் பறந்து விரிந்துள்ளன. திடீர் மழை → பிரகாசமான சூரிய வெளிச்சம் → மீண்டும் திடீர் மழை என மாறி மாறி கால நிலை நிலவுகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கலாம் - இது வடகிழக்கு பருவமழையின் இயல்பான தன்மையாகும். மேலும் நினைவில் கொள்ளுங்கள், இது கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல! தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். குடைகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், பருவமழை இப்பதான் தொடங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறுகையில், இலங்கை அருகே காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஈரப்பதமான கீழைக்காற்றின் வருகையால், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் மாநிலங்களில் துவங்க சாதக நிலை காணப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களான #கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, #திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும், நாளையும் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். சென்னை & புறநகர் மாவட்டங்களில் நள்ளிரவு/அதிகாலையில் மழை வாய்ப்பு இருக்கிறது. இந்த துவக்க சுற்று மழை அக்டோபர் 20 வரை நிடிக்கும். இம்மழையில் உள்மாவட்டங்கள் அகட், நல்ல மழைப்பொழிவை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
