நெருங்கும் புயல்.. சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் வலுபெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள முழு அறிக்கையில், "நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று (25-10-2025) காலை 0530 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 0830 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, 440 கி.மீ மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நேற்று (24-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (25-10-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
இன்று (அக்.25) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.26)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக். 28ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.29 முதல் 31 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (26-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications