சென்னையில் இன்றைக்கு சம்பவம் இருக்கு.. குடையை மறந்துடாதீங்க! வெதர்மேன் வார்னிங்
சென்னை: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி என தென் கர்நாடாகவிலும், கேரளாவின் காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடாவிலும், உடுப்பியிலும் 250 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து 7வது நாளாக இன்றும் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை தொடரும்.

கேரளாவை பொறுத்தவரை இன்றும் நாளையும் கனமழை தொடரும். நாளை மறுநாள் ஓரளவுக்கு மழையின் தீவிரம் குறையும். ஜூன் 5ம் தேதி வாக்கில் மழை குட்டி பிரேக் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக அளவு மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தலா, 39 மி.மீ., 38.7 மி.மீ., 29.9 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமான அளவை விட இது அதிகம். எனவே தமிழ்நாட்டின் சராசரியில் மழை 193% அதிகமாக பெய்திருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.31 முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications