வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. கடலோரம் + மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மழை கொட்டும்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 1 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நடப்பு மாதத்தின் முதல் 2 நாட்கள் மட்டுமே கனமழை பெய்தது. அதன்பிறகு தமிழகத்தில் மழை பெரிதாக பெய்யவில்லை. அதிலும் கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது.

இன்று மழைக்கு சான்ஸ்
ஆனால் பனியின் தாக்கம் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனி அதிகரித்து குளிரான கிளைமேட் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இன்று கடலோரம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும்
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
புத்தாண்டு அன்று கிளைமேட் எப்படி?
வரும் 01-01-2026: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
02-01-2026 மற்றும் 03-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 04-01-2026 மற்றும் 05-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
30-12-2025 முதல் 01-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். 30-12-2025 மற்றும் 31-12-2025: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி
சென்னையில் இன்று (30-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (31-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 30-12-2025 முதல் 01-01-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. 02-01-2026 மற்றும் 03-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications