Rain Alert: இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், 'எல்நினோ' தாக்கத்தால் மழை அதிகம் பெய்யவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகுவதற்கான சூழல் காணப்படுகிறது. இதனால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது.

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அப்பகுதிக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலுார், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன், கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது.
இதையொட்டி இன்று (15.10.2026) விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை. தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை காணப்படும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக பருவமழை தொடங்கும் போதே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
