உத்தர பிரதேசம் உட்பட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்கள்.. பாஜக வியூகம் என்ன?
டெல்லி: தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட கிழக்கு மண்டல மாநிலங்களில் மையம் கொண்டிருந்த அரசியல் புயல், அந்த மாநில தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், அடுத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ள வடக்கு மண்டலத்திற்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளது.
2021ம் ஆண்டுக்கும், 2022ம் ஆண்டுக்கும் இதுதான் வித்தியாசம்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர கிழக்கே மணிப்பூர், மேற்கே கோவா ஆகிய குட்டி மாநிலங்களும் ஆண்டின் துவக்கத்தில் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில், ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆக மொத்தம் அடுத்த ஆண்டு 7 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
2014 லோக்சபா பொதுத் தேர்தலில் வென்று பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. 2017 ஆம் ஆண்டு உபி சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றி அக்கட்சி வலிமையை மேலும் உறுதிப்படுத்தியது. நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், இந்தியாவின் இதயப் பகுதியில் அமைந்த மாநிலம் என்பன போன்றவை, இந்த வெற்றியின் மகத்துவத்தை அதிகரித்தன.
2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக மீண்டும் அரியணையை பிடிக்குமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. ஏன் என்றால், சுமார் 35 ஆண்டுகளில் எந்த ஒரு முதலமைச்சரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு ஆட்சிக்கு வரமுடியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக தங்கள் வியூகத்தை கூர்மைப்படுத்துகின்றன. ஆட்சிக்கு எதிரானவர்கள், பிற்படுத்தப்பட்ட ஜாதி உத்தி, விவசாயிகள் பிரச்சினை, கொரோனா விஷயத்தில் நடந்த தவறான மேலாண்மை போன்றவற்றை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

ஆண்டின் முதல் காலாண்டில் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள நிலவரம் என்ன என்பதை ஒரு ரவுண்ட் பார்க்கலாம்:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியிலுள்ளது. 2022ம் ஆண்டில், பாஜக, தான் ஆளும் மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயலும்.
உத்தரப் பிரதேசம்:
உத்தரபிரதேசம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது, மொத்தம் 403 தொகுதிகள் அங்குள்ளன. நாட்டின் மிகப்பெரிய மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக கருதப்படுவது உ.பி. தற்போது அப்னா தளம் (சோனலால்) உடன் கூட்டணி அமைத்து பாஜக ஆண்டு வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
சமாஜ்வாதி கட்சி (SP) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) ஆகிய இரண்டு முக்கிய கட்சிகள் தவிர, காங்கிரஸும் முக்கிய போட்டியாளராக உள்ளது. பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி, நாட்டின் மிகவும் சிக்கலான அரசியல் களம் என வர்ணிக்கப்படும் உ.பி.யில் கோதாவில் குதித்துள்ளது காங்கிரஸ். செப்டம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ABP-C Voter கருத்து கணிப்பின் முதல் சுற்றுப்படி பார்த்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
அதேநேரம், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க தேர்தலுக்கு முன்னதாக எழும் பல பிரச்சினைகளுக்கு கட்சி தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக முன்பாக, உள்ள முக்கிய பிரச்சனைகள் கொரோனா, விலைவாசி, குற்ற விகிதம், சட்டம் ஒழுங்கு நிலைமை, பாஜக தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் மாநில கோஷ்டி அரசியல் ஆகியவைதான்.
இவை தவிர, மற்றொரு முக்கிய பிரச்சினை மாநிலத்தில் உள்ள ஜாதி அரசியல், ஏனெனில் எதிர்க்கட்சிகள் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை ஒருங்கிணைத்து பாஜகவை குறிவைக்கின்றன. நிச்சயமற்ற பிராமணர்கள் ஓட்டு, சமாஜ்வாடி கட்சியை தொடர்ந்து ஆதரிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மற்றும் இஸ்லாமிய ஓட்டுக்களை ஈர்ப்பது பாஜக முன்னால் உள்ள சவால்.
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வியூகம்
பாஜக அரசு கடந்த சில மாதங்களாக ஜாதி மற்றும் பிராந்திய விவகாரங்களை சரி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜிதின் பிரசாதா மற்றும் ஆறு பேரை தனது அமைச்சர்கள் குழுவில் சேர்த்துக் கொண்டார். பல்டு ராம், சத்ரபால் சிங் கங்வார், சங்கீதா பல்வந்த், தரம்வீர் சிங், சஞ்சீவ் குமார் மற்றும் தினேஷ் கட்டிக் ஆகியோர் மாநில அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களில், பிரசாதா பிராமண சமுதாயத்தை சேர்ந்தவராகும், கட்டிக் மற்றும் ராமர் பட்டியல் சாதியினர் மற்றும் குமார் பட்டியல் பழங்குடியினர். கங்வார் (குர்மி), பல்வந்த் (பிந்த்) மற்றும் சிங் (பிரஜாபதி) ஆகியோர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு ஜாதி கணக்குப் போட்டு அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்தது. பிரசாதாவின் அமைச்சரவை சேர்க்கை பிராமண சமூகத்தை கவரும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று நம்பப்படுகிறது. மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 13 சதவிகிதம் பிராமணர்கள் உள்ளதால் அவர்களை திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
முன்னதாக, ஜூலை மாதம், பிரதமர் நரேந்திர மோடியும் 28 பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்களை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். மத்திய அரசு, ஆகஸ்ட் மாதம் இதர பிற்படுத்தப்படுத்த வகுப்பினரை (ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கும் 127வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது.
மேற்கு உ.பி.யில் அதிருப்தி அடைந்த விவசாயிகளை கவர, மாநில அரசு விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. "விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 325 வழங்கப்பட்ட பல்வேறு கரும்புகளுக்கான விலை ரூ. 350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று முதல்வர் ஆதித்யநாத் செப்டம்பர் 26ம் தேதி அறிவித்தார். அரசு செய்த பணிகளை நினைவூட்ட பாஜக கட்சி ஏற்கனவே ஜன் ஆசிர்வாத் யாத்திரைகளை நடத்தி வருகிறது.
பஞ்சாப்:
காங்கிரஸ் ஆளும் மாநிலம் பஞ்சாப். இங்கு பாஜகவின் கூட்டணியிலிருந்த ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் காரணமாக கூட்டணியிலிருந்து விலகியது. இது பாஜகவுக்கு பின்னடைவு என்ற போதிலும், அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும் காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் பல முனைப் போட்டிகளைக் காணும் மாநிலமாக உள்ளது. ஆளும் காங்கிரஸ் தவிர, ஆம் ஆத்மி மற்றும் எஸ்ஏடி-பிஎஸ்பி கூட்டணியும் ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்தில் உள்ளன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எஸ்ஏடி இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜகவிற்கு சில முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் இதில் முதன்மையானது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் கோபத்தை பாஜக வெகுவாக எதிர்கொண்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள்.
முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான எஸ்ஏடியுடனான கூட்டணி முறிந்த பிறகு ஒரு வலுவான தலைவர் இல்லாதது பாஜகவுக்கு முன் உள்ள இரண்டாவது முக்கிய பிரச்சினை.
கட்சியில் தொகுதி அளவில் சீக்கிய முகங்கள் இல்லாதது மற்றொரு பிரச்சினை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஷிரோமணி அகாலிதளம் கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. 3 தொகுதிகளில் மட்டும் வென்றது. ஆனால் இப்போது, பஞ்சாப்பில் 117 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டிய நிலை பாஜகவுக்கு உள்ளது.
பஞ்சாபில் பாஜக வியூகம்
பஞ்சாபில் தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாநில அரசியலில் நிலைபெற்ற பெரிய முகங்களை எதிர்கொள்ள, பாஜக தலித்துகள், ஓபிசி மற்றும் நகர்ப்புற இந்துக்களின் கூட்டணியை உருவாக்க முயல்கிறது என்று கூறப்படுகிறது.
பஞ்சாபில் நகர்ப்புற வாக்காளர்களிடையே பிஜேபிக்கு ஆதரவு உள்ளது.
தலித் சமூகத்தை கவர்ந்திழுக்க, தலித்கள் அதிகம் உள்ள தோபா பிராந்தியத்தில் இருந்து விஜய் சம்ப்லாவை தேர்ந்தெடுத்து, அவரை மத்திய அமைச்சர் அந்தஸ்துடன் தேசிய பட்டியல் அட்டவணை ஆணையத்தின் தலைவராக நியமித்தது மத்திய அரசு.
பஞ்சாப் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக கஜேந்திர சிங் ஷெகாவத்தை நியமித்துள்ளது. ஷெகாவத்துக்கு மூன்று இணை பொறுப்பாளர்கள் உதவிகரமாக செயல்பட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதில் ஒருவர். இவர், 2019 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார். இன்னொருவர் வெளியுறவுத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, பஞ்சாபி பேசும் தலைவராகும் இவர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரியவரும் மக்களவை எம்.பி.யுமான வினோத்பாய் சவ்தா அந்த 3வது நபராகும்.
கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் விவகாரங்களை கவனித்து வருகிறார். விவசாயிகள் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தவர் இவராகும். வேளாண் சட்டங்களிலால், பஞ்சாப் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ள நேரத்தில், மாநிலத்தில் உள்ள விவசாய சங்கங்களுடன் வைத்துள்ள, ஷெகாவத்தின் தொடர்பு தங்கள் கட்சிக்கு உதவும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் சட்டசபை பலம் 70 ஆகும். தற்போது பிஜேபி ஆளும் மாநிலம் இதுவாகும். ஒரு வருடத்திற்குள் இரண்டு முதல்வர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காரணம், உட்கட்சி பிரச்சினை.
2021 மார்ச் மாதத்தில், திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், அதன் பிறகு திரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, தீரத் சிங் ராவத்தும் ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்டின் புதிய முதல்வராகியுள்ளார்.
குறுகிய கால இடைவெளியில் இரண்டு முறை முதலமைச்சர்களை மாற்றுவது கட்சியின் இமேஜுக்கு டேமேஜ் ஆக மாறியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் "அரசியல் ஸ்திரமின்மையை" ஏற்படுத்தி மக்களுக்கு பாஜக துரோகம் செய்வதாக குற்றம் சாட்டியது.
2017 ல் 70 இடங்களில் 57 இடங்களை வென்று 47 சதவிகித வாக்குகளைப் பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. 2022 ஆம் ஆண்டில், காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுடன் மும்முனை போட்டியை பாஜக சந்திக்க உள்ளது.
உத்தரபிரதேசத்தைப் போலவே, உத்தரகாண்ட் 2002 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறிதான் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், ஏபிபி-சிவோட்டர் கணக்கெடுப்பின் முதல் சுற்றுப்படி, பாஜக வெற்றி பெறத்தான் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் பாஜக வியூகம்
பிரதமர் மோடியின் இமேஜை வைத்து வெற்றியை சுவைப்பது பாஜகவின் முக்கிய வியூகமாக உள்ளது. பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டா, பூத் நிலை கட்சி நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்து ஆலோசித்தார். அப்போது, அவர்கள், பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளவும், மாநில மற்றும் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளை விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தினார். உத்தரகாண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர் பிரகலாத் ஜோஷிக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா:
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு 2022 பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. 2017 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களை (17) வென்றது, பாஜக 13 இடங்கள் மட்டுமே வென்ரது. இருப்பினும், காங்கிரஸை ஓவர் டேக் செய்து பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளும் இந்த முறை கோவாவை குறி வைத்துள்ளன. மாநிலத்தை மீண்டும் வெல்ல பாஜக ஒரு கடினமான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 10 வருடங்களாக அங்கு ஆட்சியில் உள்ளதால் பாஜகவிற்கு எதிராக இயல்பாகவே மக்களிடம் அதிருப்தி அலை எழுந்துள்ளது. கூட்டணியிலுள்ள விஜய் சர்தேசாயின் கோவா பார்வர்ட் கட்சி (GFP) மற்றும் சுதின் தவலிகரின் மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி (MGP) ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. கோவாவில் கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் அடைந்த தோல்வி, உட்பட ஆளும் கட்சிக்கு முன் அதிக சவால்கள் உள்ளன. மேலும், மறைந்த மனோகர் பாரிக்கர் போன்ற ஒரு மக்கள் ஆதரவு கொண்ட தலைவர் கோவாவில் இப்போது பாஜகவில் இல்லை.
கோவாவில் பாஜக வியூகம்
கோவாவை வெல்ல, மாநில அரசியலை நன்கு அறிந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் சூரத் எம்பி தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் இவருக்கு வலது மற்றும் இடது கரமாக செயல்படுவார்கள்.
மணிப்பூர்:
60 உறுப்பினர்களைக் கொண்டது மணிப்பூர் சட்டசபை. 2017 சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களை பாஜக வென்றது. நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) போன்ற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைத்தது. எனினும், இந்த முறை, கான்ராட் சங்மா தலைமையிலான NPP தனித்து சென்று மணிப்பூரில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, NPP க்கு மணிப்பூரில் நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அமைச்சர்களாக உள்ளனர்.
மணிப்பூர் பாஜக வியூகம்
மணிப்பூர் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஒரு முக்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவு முகமான சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதாவை பாஜக நியமித்துள்ளது. சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர் யாதவ் மற்றும் மாநிலத்தில் கட்சி விவகாரங்களின் பொறுப்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்கள் விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications