வாரிசுகள் அரசியலுக்கு வரலாமா கூடாதா? - அ. குமரேசன்
தமிழகத்தில் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். ஆங்காங்கே அந்தந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கொந்தளிப்பு என்ற செய்திகளும் வரத் தொடங்கிவிட்டன. ஒரு கட்சியின் வேட்பாளர் எப்படிப்பட்டவர் தெரியுமா என்று போட்டிக் கட்சியினர் ஒரு புறமும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இன்னொரு புறமுமாக விமர்சனங்களையும் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் ஆகியவற்றிலும் சமூக ஊடகங்களிலும் அந்த விமர்சனங்கள் பல கோணங்களில் பதிவுசெய்யப்படுகின்றன.
அந்தக் கோணங்களில் ஒன்றுதான், வாரிசு அரசியல் பற்றியது. கட்சிகளின் பெரிய தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள், சட்டமன்ற/நாடாளுமன்ற பிரதிநிதிகளாகச் சென்றவர்கள் ஆகியோரது குடும்ப வாரிசுகள் இப்போது பதவிகளுக்கான வாரிசுகளாகவும் கொண்டுவரப்படுகிறார்கள் என்று அந்தப் பதிவுகளில் குற்றம் சாட்டப்படுகிறது. தலைவர்களின் மகன்கள் அதிகமாகவும், மனைவியர் மகள்கள் ஓரளவுக்கும் தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படுவதை மறுப்பதற்கில்லை. குடும்ப உறவினர்கள் எண்ணிக்கையும் குறைந்ததில்லை.
வட மாநிலங்களில் இது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மேற்கில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காஷ்மீரில் தேசிய மாநாடு, தெற்கில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர்சி ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளில் குடும்பத்தினரே கட்சியிலும் அரசுப் பொறுப்புகளிலும் இருப்பது புதியதல்ல.

தமிழகத்தில் முக்கியமாக திமுக, அதிமுக, காங்கிரஸ் தலைவர்கள் மீது இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. கடுமையாகப் போராடித் தங்களது மகனுக்கு 'சீட்' பெற்றவர்கள குறித்தும் செய்தி அலசல்கள் வருகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அதன் அகில இந்தியத் தலைமை தொடர்ந்து நேரு, இந்திரா, ராஜீவ், ஆகிய மூன்று முன்னாளைய பிரதமர்களின் வாரிசுகளாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரது பிடியிலேயே இருக்கிறது என்று பாஜக-வினர் திரும்பத் திரும்பப் பேசி வந்திருக்கிறார்கள். பரம்பரை அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பேசியிருக்கிறார். ஆனால், பாஜக-வின் அகில இந்தியத் தலைமையில் இப்போதைக்கு வாரிசுகள் வரவில்லை என்றாலும், அதன் மாநிலத் தலைவர்கள் பலரது வாரிசுகளுக்கும் அரசியல் பதவிகளுக்கான வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. 2019ல் வந்த ஒரு செய்திக்கட்டுரை, பாஜக-வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் 44 சதவீதத்தினர் வாரிசுகளாக வந்தவர்கள்தான் என்று தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட பரம்பரை அரசியலுக்கும் முடிவு கட்டப்படுமா என்று காங்கிரஸார் கேட்பதில் நியாயம் இல்லையென்று சொல்ல முடியுமா?
திமுக-வில் மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் என்ன பேசினார்கள், எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை விட, அவர்கள் கலைஞரின் குடும்பத்தினர் என்பதைக் கூடுதலாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. இவர்கள் திடீரென்று தலைமையிடங்களுக்குக் கொண்டுவரப்படவில்லை, கட்சிக்கான களப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதன் அடிப்படையிலேயே பொறுப்புகள் தரப்பட்டுள்ளன என்ற விளக்கம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் மகன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது, மற்றொரு மகனும் களத்தில் இறக்கிவிடப்படுவது, இதே போல் வேறு சிலரது வாரிசுகளுக்குமான வாய்ப்புகள் பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலும் குடும்பச் செல்வாக்கு இருக்கத்தானே செய்கிறது.
வாரிசு அரசியலின் தீங்கு
கட்சிச் சார்புகள் இல்லாமல் விமர்சிக்கிறவர்கள், வாரிசு அரசியலால் ஜனநாயக வளர்ச்சி முடக்கப்படுகிறது என்பதையே முக்கியமான தீங்காகக் குறிப்பிடுகிறார்கள். வாரிசு என்பதற்காக மட்டும் ஒருவருக்குக் கட்சிப் பதவிகள் தரப்படுகிறபோது, களத்தில் உழைக்கிறவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், அரசியல் அனுபவத்தோடும் பக்குவத்தோடும் பிரச்சினைகளைக் கையாளக்கூடியவர்களுக்குக் கட்சியை வழிநடத்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது, குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் கட்சிகளும், அரசாங்க அதிகாரங்களும் சிக்கிக்கொள்கின்றன என்ற தீங்குகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. மன்னர்கள் காலம் போன்ற பரம்பரை அதிகாரம் இன்றைக்கும் தொடரலாமா, அது மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கே எதிரானதல்லவா என்ற கேள்விகளும் வைக்கப்படுகின்றன.
வேறு கட்சியினர் என்பதற்காக மட்டுமே இப்படிக் கேட்பவர்களை ஒதுக்கிவிடலாம். ஆனால், எந்தக் கட்சியானாலும் இப்படிக் கேட்கிறவர்களின் கவலைகளை ஒதுக்கிவிட முடியாது. அவர்களின் குரல்களைக் கேட்பதும், அவர்களோடு உரையாடுவதும், அவர்களது கேள்விகள் பற்றி விவாதிப்பதும் அவசியமானது. ஒரு மாற்றுக் கேள்வியிலிருந்தே அந்த விவாதத்தைத் தொடங்கலாம்:
"வாரிசுகள் என்பதற்காகவே அரசியல் பொறுப்புகள் தரப்படக்கூடாதுதான். ஆனால், வாரிசுகள் என்பதற்காகவே அரசியல் பொறுப்புகள் மறுக்கப்படலாமா?"
வாரிசுகள் வந்தால் என்ன?
ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம் குடும்பப் பிடிகளுக்குள் அரசியல் அதிகாரங்கள் சென்றுவிடாமல் தடுப்பதுதானா? மாறாக, அதிகாரத்தை முடிவு செய்வதில் அனைவரின் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதே மையமான நோக்கமல்லவா? அனைவரின் பங்கேற்பு என்கிறபோது அதில், குடும்பத்தினரும் வருகிறார்கள்தானே? இந்தக் கேள்விகளை எழுப்புவதால், வாரிசு அரசியலை விமர்சிப்பது போலத் தொடங்கி, அதை ஆதரிப்பது போல முடிப்பதாக எடுத்துக்கொள்ளப்படலாம். ஆனால், ஆரோக்கியமான அரசியலுக்கு ஆரோக்கியமான விவாதங்கள் அடிப்படையானவை என்ற புரிதலோடு இந்த விவாதம் அணுகப்படும் என்று நம்புகிறேன்.
மொழித் திணிப்பு எதிர்ப்பு, பகுத்தறிவுக் கருத்து போன்ற விவாதங்களில், இந்தி பயிலும் வாரிசுகள், கோவிலுக்குச் செல்லும் குடும்பத்தினர் பற்றிக் கூறிவிட்டு, "தங்களுடைய வீட்டிலேயே மாற்ற முடியாதவர்கள் வெளியே அதைப் பேசுவது போலித்தனம்," என்பார்கள். சட்டென்ற பார்வையில் அது சரியான விமர்சனமாகத் தோன்றும். ஆனால், குடும்பத்தினர் சமூகத்தின் அங்கம்தான். சமூகத்தில் ஒரு நிலைப்பாட்டைக் கட்டாயமாக ஏற்கச் செய்வது ஒரு கருத்தியல் ஆக்கிரமிப்பு. அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பிலிருந்துதான் மொழித் திணிப்பை நியாயப்படுத்துகிற வாதங்களும், மதப்பகைமையை விசிறிவிடுகிற வன்மங்களும் வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் அந்தத் திணிப்புகளும் வன்மங்களும் கூடாது என்பது எந்த அளவுக்கு ஜனநாயகத்திற்கு இணக்கமானதோ, அதே அளவுக்குக் குடும்பத்திற்கு உள்ளேயும் கருத்தியல் நிலைப்பாடுகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படக்கூடாது என்பதும் ஜனநாயகத்திற்கு இணக்கமானதுதான். ஒரு கருத்தை ஏற்கவோ மறுக்கவோ சமூக உறுப்பினர்களுக்கு உள்ள உரிமை, குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கிறது.
இங்கே விசாரணைக்குரியது என்னவெனில், இப்படிக் குடும்பத்தினரையே மாற்ற முடியாதவர்கள் என்று விமர்சிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், குடும்பத்தினரை அரசியலுக்குக் கொண்டுவருவதை மட்டும் கேள்வி கேட்பது ஏன்?
அதில் ஒரு பெருமிதம்
தலைவர்களோ, தொண்டர்களோ வாரிசுகள் அரசியலுக்கு வரவேண்டும். குடும்பமே இயக்கத்தில் இருக்கிறது என்று கம்யூனிஸ்ட்டுகள் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்கள். சமூக மாற்றங்களுக்காக இயங்குகிற மற்ற கட்சிகளிலும் இந்தப் பெருமித உணர்வு தழுவக்கூடும். குடும்ப உறுப்பினர்கள் தாங்களாக எல்லா இயக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து இயக்கத்தைத் தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டுமேயன்றி, தகப்பனோ தாயோ சொன்னதற்காக வருவதாக இருக்கக்கூடாது.
அதே போல், ஒருவரது பெற்றோர் இயக்கத் தலைவர்களாக இருப்பது, அவரது அரசியல் நுழைவுக்கு ஒரு அடையாளச்சொல்லாக இருக்கலாமேயன்றி, அதுவே கடவுச்சொல்லாக இருக்க முடியாது. அடையாளத்தைப் பயன்படுத்தி வருகிற ஒருவர் தனது தொடர்ச்சியான ஈடுபாட்டாலும் அரசியல் புரிதலாலும் செயல்திறனாலும் பணிகளாலும்தான் கடவுச்சொல்லைப் பெற முடியும். இவை இல்லையேல் கட்சி உறுப்பினர்கள் தள்ளுபடி செய்துவிடுவார்கள். அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட வாரிசுகள் பலர் திரும்பிப்போனதுண்டு. மற்றபடி, இது சம்பந்தப்பட்ட கட்சியின் உள் விவகாரம். அதன் பல்வேறு மட்டத்திலான தலைவர்களும் தொண்டர்களும் ஏற்கிறார்களா இல்லையா என்பதே கவனிக்கப்பட வேண்டும். ஏற்கிறார்கள் என்றால், அதன் பிறகு அந்த வாரிசுகள் என்ன சொல்கிறார்கள், எதைச் செய்கிறார்கள் என்பதை விமர்சிக்கிற ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தலாம். அவர்கள் வாரிசுகள் என்பதை மட்டுமே விமர்சனத்திற்கு உள்ளாக்குவதில் பொருளில்லை.
ஜனநாயக நடைமுறை உள்ள நாடுகளில் வாரிசுகள் அரசியலுக்கு வருவது இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பரவலாக இருக்கிறது. இந்த நாடுகளின் வரலாற்றுப் பின்னணிகளோடும், நிலவுடைமைச் சமுதாயக் கட்டமைப்புகளோடும் இதற்குத் தொடர்பிருக்கிறது. மதமும் சாதியும் முன்னிறுத்தப்படுவது கூட அந்த வரலாறுகளோடும் கட்டமைப்புகளோடும் இணைந்ததே. அதைக் கேள்வி கேட்க முன்வராமல், இதை மட்டுமே பெரிய விவாதமாக்குவது ஏன்? அது எளிதாக இருக்கிறது என்பதாலா?
இங்கே மட்டுமல்ல
மேற்கத்திய நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்த வரலாறுகள் உண்டு. அமெரிக்காவில் கென்னடி மகன்கள், ஜார்ஜ் புஷ் மகன் வந்ததில்லையா? வேறு சில நாடுகளிலும் இத்தகையவர்கள் இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் தங்களுடைய கட்சிகளின் பிரதிநிதிகளாக அறிமுகமாகியே அரசியலில் வளர்ந்தார்களேயல்லாமல், வாரிசுகளாக அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றோடும் தொடர்புடைய ஜனநாயக வளர்ச்சி இது. அந்த வளர்ச்சிக்கான வழிகளைப் பற்றிப் பேசாமல் வாரிசு அரசியலை மட்டும் விவாதிப்பது வெறும் சோஃபாப் பேச்சுகளாகக் கடந்துவிடும்.
இந்த விவாதத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்புடைய இன்னொரு போக்கு பற்றிய தெருப் பேச்சுகளும் நிகழ வேண்டும். குடும்பத்தை ஈடுபடுத்துவது என்ற பெயரில் கட்சிகளின் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றிற்குக் குழந்தைகளை இட்டுச்செல்வது பற்றிய பேச்சு அது. வீட்டில் கவனித்துக்கொள்வதற்கு வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கட்சி உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துப் போவது தவிர்க்கவியலாதது. ஆனால், பிஞ்சாக இருக்கிறபோதே கட்சியின் சித்தாந்தம், கொள்கைள், நடைமுறைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாகக் கருதிக்கொண்டு அழைத்துப் போவது வேறு.
குழந்தைகளின் தேர்வுச் சுதந்திரம் இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு வேறு கட்சியைத் தேர்ந்தெடுத்தால் அதிர்ச்சியே ஏற்படும். அவர்கள் வளர வளர, சுற்றி நடப்பதைக் கவனித்து, இளமைப் பருவ வயதை அடைகிறபோது, அரசியல் இயக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்து சரியானது என எந்தக் கட்சியை முடிவு செய்கிறார்களோ அதில் இணைவது அல்லது அதற்கு ஆதரவளிப்பது அவர்களுடைய உரிமை. மதிக்கப்பட வேண்டிய குழந்தை உரிமை மீறப்படுகிறபோது அரசியல் இயக்கங்களைத் திட்டித் தீர்க்கிறவர்கள், மதம், வழிபாடு, சாதி, சடங்கு ஆகிய தளங்களிலும் குழந்தைகளின் சொந்தத் தேர்வுரிமை புறந்தள்ளப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை. சிறு வயதிலிருந்தே அப்படியான வழியில் கொண்டுசெல்வதுதான் குழந்தையின் ஒழுக்கத்தை வளர்க்கும் என்று அதற்கொரு புனித முலாம் பூசப்பட்டுவிடுவதால், அது பற்றிய கேள்விகள் வருகிறபோது பதறிப்போகிறார்கள்.
அரசியல் என்றாலே ஏதோ அதற்கென அவதரித்து வந்தவர்களின் விவகாரங்களாகவே பார்ப்பதிலிருந்துதான் வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்கள் வருகின்றன. அந்த விமர்சனங்கள் கருத்துக்கூர்மையோடு ஒரு புறமும், வெறும் கேலி கிண்டல்களாக இன்னொரு புறமும் வெளிப்படுத்தப்படுகின்றன. அரசியல் அவலங்களுக்கு அதில் ஈடுபடுகிறவர்களின் செயல்கள் மட்டுமே காரணமல்ல; அரசியலே வேண்டாமெனத் தானுண்டு தன் வேலையுண்டு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர்களின் செயலின்மையும் முக்கியக் காரணம்தான். கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களோடு அவர்களது வாரிசுகளும் வரட்டும். நாடும் மக்களும் நன்றாக இருக்க விரும்பும் எல்லோரும் வரட்டும், அவர்களது வாரிசுகளும் வரட்டும். அரசியல் நலம் பெறட்டும்.












Click it and Unblock the Notifications