வெறுப்பு அரசியல்... வெறுப்பின் வேர்களை வெறுப்பால் வெட்ட முடியுமா? அ. குமரேசன்
"வெறுப்பு முடிவுக்கு வருவது வெறுப்பால் அல்ல, அன்பால் மட்டுமே. இதுவே நிலையான விதி," என்று 2,500 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றார் புத்தர். தன் இளம் வயதில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவரது அவதி, முதியவர் ஒருவரது அவலம், பிணமாகிவிட்ட ஒருவரது சோகம் ஆகியவற்றைக் கண்ட மனத்துயரத்தால்தான் சித்தார்த்தன் துறவறம் பூண்டு கௌதம புத்தரானார் என்றே பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவரோ இங்கே நிலவிய கோரமான சமூகப் பாகுபாடுகள், அவற்றை நியாயப்படுத்திய சமய விதிகள் மீதான வெறுப்போடும், அவற்றுக்கு முடிவு கட்டும் விருப்போடும் ஒரு இயக்கமாகப் புறப்பபட்டவர். ஆகவேதான் அவரது சமத்துவக் கோட்பாடுகள் மீது வெறுப்புக் கொண்ட ஆதிக்கவாதிகள் புத்த இயக்கத்தையே மண்ணிலிருந்து விரட்ட முயன்றார்கள். பிற்காலத்தில் இயக்கம் மதமாக மாறிப்போனதால்தானோ என்னவோ சகமனிதர்களுக்கு எதிரான வெறுப்பை அதனால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இதற்கு இலங்கை ஒரு சாட்சி.
தொன்மைக் காலத்திலிருந்தே வெறுப்பை விரட்டுவதற்கான தத்துவங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. வெறுப்பின் உச்ச வெளிப்பாடான சண்டைகளில் குருதி ஊற்றெடுத்துப் பாய்கிறபோதெல்லாம் வெறுப்பைக் கைவிடச் சொல்லும் அறிவுரைகள் ஒலிக்கின்றன. எல்லா நாடுகளிலும் மக்கள் தலைவர்கள், ஏன் சமய குருமார்களும் வெறுப்பு வேண்டாமென்றே போதித்திருக்கிறார்கள். ஆனால், வெறுப்பு முடிவுக்கு வரவில்லை. அது மட்டுமல்ல, 'வெறுப்பரசியல்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அது தொடர்கிறது.

"இந்த உலகத்தில் வெறுப்பால் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனால் ஒரு பிரச்சினை கூட தீர்க்கப்பட்டதில்லை," என்றார் அமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவரும் கவிஞருமான மாயா ஏஞ்ஜலூ (1928-2014). வெறுப்பால் ஒரு பிரச்சினையும் தீர்க்கப்பட்டதில்லை என்பதோடு, வெறுப்பே உலகின் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. வெறுப்பரசியல் பகையரசியலாக வளர்ந்திருக்கிறது.
அநீதிகளையும் வெறுக்கக்கூடாதா?
அப்படியானால், அநீதிகளை வெறுக்கக்கூடாதா? கொடுங்கோன்மையை வெறுக்கக்கூடாதா? சர்வாதிகாரத்தை வெறுக்கக்கூடாதா? இனப்பாகுபாட்டை வெறுக்கக்கூடாதா? சாதிய ஆணவத்தை வெறுக்கக்கூடாதா? மதவெறியை வெறுக்கக்கூடாதா? பெண்ணடிமையை வெறுக்கக்கூடாதா? சுரண்டல் வேட்டையை வெறுக்கக்கூடாதா? இயற்கை அழிப்பை வெறுக்கக்கூடாதா? மூடநம்பிக்கையை வெறுக்கக்கூடாதா? இப்படி வெறுக்கத்தக்கவை என இன்னும் நிறைய இருக்கின்றன. புவிப்பரப்பிலிருந்து அவற்றை அகற்றுவது, அதே வெறுப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவதன் மூலமாகவே சாத்தியமாகும். அதை விடுத்து, அந்த மற்றவர்களை வெறுப்பதன் மூலம் ஒருபோதும் சாத்தியமாகாது. குறிப்பாக, வெறுக்கத்தக்க ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்ட எளிய மக்களையும் சேர்த்து வெறுத்து ஒதுக்குவதன் மூலம், அவர்களுடன் உரையாடுகிற, மாற்றம் வேண்டுமென ஏற்க வைக்கிற வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.
எடுத்துக்காட்டாக, சாதிமோகத்திற்கு எதிரான சிந்தனைகளை, அந்த மோகத்தில் இருக்கிறவர்களிடம் கொண்டுசெல்வதில்தான் வெற்றி இருக்கிறது. சாதி எப்படி அவர்களுடைய இயற்கையான மனிதத்தன்மையை அரித்துவிடுகிறது, வெற்றுப் பெருமையால் எப்படி மற்றவர்களை வெறுக்க வைக்கிறது, குறிப்பாக எப்படி அவரவருடைய சாதியை விடத் தாழ்ந்ததாகக் கூறிக்கொள்கிற சாதிகளைச் சேர்ந்தவர்களை இழிவாகப் பார்க்கத் தூண்டுகிறது என்றெல்லாம் உரையாடுவதன் மூலமாகவே உறுத்தலுணர்வை ஏற்படுத்த முடியும். உரையாடுவது என்றால் உட்கார்ந்து பேசுவது மட்டுமல்ல. அந்த உரையாடலை ஒரு கதையால் செய்ய முடியும், ஒரு கவிதையால் நிகழ்த்த முடியும், ஒரு திரைப்படத்தால் இன்னும் வலுவாகச் சேர்க்க முடியும்.
பகுத்தறிவு, பாலின சமத்துவம், மதங்களைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கம் என ஒவ்வொரு களத்திலும் அடர்ந்திருக்கிற வெறுப்புப் புதர்களை இப்படித்தான் அப்புறப்படுத்த முடியும். புதர்களை அகற்றுவதற்குத் துணையாகும் கரங்கள், அந்தப் புதர்களின் நிழலில் நிற்கிறவர்களிடமிருந்துதான் வர வேண்டும். நாமும் ஏதோவொரு கட்டத்தில் அதைப் பாதுகாப்பான நிழலாகக் கருதி நின்றவர்கள்தான் என்பதை, பகுத்தறிவாளர்கள் முதல் சமத்துவவாதிகள் வரையில் நினைவில் கொள்ள வேண்டும்.
சொந்த விடுதலை
ஒரு சொந்த அனுபவத்தைப் பகிர்வது பொருத்தமாக இருக்கும். திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக்கொள்வதை ஆண்டுதோறும் செய்து வந்தவன் நான். வாசிக்கக் கிடைத்த அறிவியல் புத்தகங்களும், விவாதிக்கக் கிடைத்த நட்புகளும்தான் செந்தூருக்குப் பேருந்து ஏறுவதை முடிவுக்குக் கொண்டுவந்தன. அந்தப் புத்தகங்களோ, நண்பர்களோ எனது நம்பிக்கையை மூடத்தனம் என்று கூட சொன்னதில்லை. அதே போல, குடும்பத்திலும் உறவுகள் சார்ந்த நிகழ்வுகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட சாதிப்பெருமை கலந்த சடங்குகளால் என் மனதிலும் அது ஊறிப்போயிருந்தது. புத்தகங்களும் தோழமைகளும் என்னோடு நடத்திய உரையாடல்கள்தான் சாதிப்பெருமை பற்றிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி அதிலிருந்து விடுதலை பெற வைத்தன.
இப்போது இந்த உரையாடலைக்கூட, வெறுப்பரசியல் எதிர்ப்பாளர்களுடன்தான் நடத்த வேண்டியதாக இருக்கிறது. சாதியத்தையும் மத ஆதிக்கத்தையும் கெட்டியாக வைத்திருப்பதற்காக வெறுப்பரசியலை விசிறிவிடுகிறவர்களோடு பேச இயலாது. அவர்களுடைய நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததே வெறுப்பரசியல் வளர்ப்பு. இன்றைய கொரோனா தாண்டவச் சூழலிலும் கூட, விமர்சனங்களை முன்வைக்கிறர்களைத் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், மருத்துவம் தொடர்பான சர்ச்சையில் கூட சிறுபான்மை மதத்தினரின் சதி என்றும் திசைதிருப்புவதன் பின்பக்கத்தில் அந்த நிகழ்ச்சிநிரல் இருப்பதைக் காண முடியும்.
ஆனால், இப்படியான வாதங்களில் நியாயம் இருப்பதாக நம்புகிற மக்களிடம் உரையாடியாக வேண்டும். அவ்வாறு அன்போடு உரையாடுவதற்கு, வெறுப்பை வளர்ப்போர் மீதான கோபச் சொற்களோ, அவர்களைக் கிண்டலாக அடையாளப்படுத்தும் அரசியல் சொற்களோ பயன்படாது. அந்தச் சொற்கள்தான் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், கணிசமான பகுதி மக்கள், இவர்களும் வெறுப்பரசியல்தானே செய்கிறார்கள் என்று காதுகளை மூடிக்கொள்ள வைத்துவிடும். அவர்களுடன் உரையாடுகிற நோக்கமே அடிபட்டுவிடும்.
நாட்டின் அரசமைப்பு சாசன மாண்பாகிய மதச்சார்பின்மைக்கு எதிரான எண்ணங்கள், மதச்சார்பின்மை என்றாலே பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களுக்கு எதிரானது என்பதான கருத்துகள் வெறும் சொற்பொழிவுகள் வழியாக அல்ல, உரையாடல்களின் வழியாகவே கொண்டுசெல்லப்பட்டன. குடும்ப நிகழ்வுகள் முதல் கோவில் விழாக்கள் வரையில் அந்த உரையாடல்கள் நடத்தப்பட்டன - நடத்தப்படுகின்றன. பகைமை அரசியலைத் தடுக்கக் களமிறங்குகிறவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு விடை காண வேண்டிய கேள்வி: நாம் மக்களோடு உரையாடப் போகிறோமா அல்லது கருத்தொற்றுமை உள்ளவர்களிடையே மட்டும் பேசி அடங்கிவிடப்போகிறோமா?
அது ஒரு தொற்றுநோய்!
இனம், வர்க்கம், மொழி, மதம், சாதி, பாலினம் என்ற அடிப்படைகளில் ஆதிக்க மோகத்தோடு வெறுப்பரசியல் வளர்க்கிறவர்களுக்குச் சொல்வதற்கும் ஒரு செய்தி இருக்கிறது. வெறுப்பை வளர்ப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கே கேடானதுதான். வெறுப்பு ஒரு தொற்றுநோய் போல என்று உலக அளவிலேயே உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கொலையும் செய்யத் தூண்டுகிற அளவுக்கு ஆட்டுவிக்கக்கூடிய வெறுப்பு மனித இதயத்தையும், ஆன்மாவையும், உடலையும் தாக்குகிற ஒரு நோய் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதைப் பற்றித் தனது ஆய்புக் கட்டுரையில் கனடா நாட்டு டொரோன்டோ பல்கலைக்கழகத்தின் உலக சுகாதாரத்துறைப் பேராசிரியர் இஸ்லெடின் அபுலாய்ஷ், "வெறுப்பு சிக்கலானது, தனித்தனியே மாறுபடுவது, நாசகரமான எண்ணங்களை ஏற்படுத்துவது; தனி மனிதர்களுக்கும் குழுக்குழுவாக இருப்போருக்கும் சமூகங்களுக்கும் அது ஒரு தொற்றுநோய்," என்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆவணத்தில், வன்முறை பற்றிய விளக்கம் ஒன்று தரப்பட்டிருக்கிறது: "ஒருவர் தனக்கு எதிராக, அல்லது இன்னொருவருக்கு எதிராக, அல்லது ஒரு குழுவுக்கு எதிராக அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தலாகவோ உண்மையாகவோ, நேரடி வலிமை அல்லது அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறை. அது அது கடுமையான காயத்தை அல்லது மரணத்தை அல்லது உளவில் பாதிப்பை அல்லது வளர்ச்சிக் குறைபாட்டை அல்லது பேரிழப்பை ஏற்படுத்துவதாகவோ, ஏற்படுத்தக்கூடியதாகவோ முடியும்." அப்படிப்பட்ட வன்முறைக்கு இட்டுச் செல்வதுதான் வெறுப்பு. உள்ளூர் சாதி ஆணவக்கொலைகள், உலக அரங்கில் மதத்தை முகமூடியாக மாட்டிக்கொண்ட தீவிரவாதத் தாக்குதல்கள், கறுப்பின மக்களை நசுக்கும் வெள்ளை முழங்கால்கள் வரையில், அரசு அரியாசனங்களால் போர்க்களங்களில் பலிகொடுக்கப்படுவது வரையில் பலப்பல வடிவங்களில் வெறியாட்டம் போடுகிற வன்முறைகளின் உறைந்துபோயிருப்பது இந்த வெறுப்பரசியலே.
"உலக சமுதாயம் வெறுப்பை ஒரு பொது உடல்/மனநலப் பிரச்சினையாக அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் வெறுப்புச் சூழலைக் கையாள்வதோடு நிற்காமல், கருத்துப்பரவல், கல்வி, விழிப்புணர்வின் மூலம் வெறுப்பின் வேர்க்காரணங்கள் தடுக்கப்படுவதை நோக்கி நகர முடியும்," என்கிறார் இஸ்லெடின் அபுலாய்ஷ். மறுப்பதற்கில்லை. இயற்கைக் பேரிடர்களை விடவும் கொடூரமான வெறுப்பரசியலின் வேர்க்காரணங்கள் களையப்படுவதை நோக்கி உலக சமுதாயம் நகர வேண்டும். வெறுப்பரசியல் நோயாளியாகத் திரியாமல் அன்பின் வெளிச்சத்தில் உலக சமுதாயத்தோடு இணைந்து நகர்கிற பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதருக்கும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications