For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முருகனுக்கு அரோகரா ....தமிழனுக்கும் அரோகரா!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப வீரபாண்டின்

இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை....தம்பிகள் பலரையும் அழைத்துக் கொண்டு!

பண்பாட்டுப் புரட்சி அல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது' என்னும் முழக்கத்தோடு, "வீரத் தமிழர் முன்னணி" என்னும் பெயரில் பழனிக்குக் காவடி எடுப்பதே பண்பாட்டுப் புரட்சி என அறிவித்துவிட்டார். (இந்தப் பண்பாட்டுப் புரட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஏற்கனவே செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, அலகு குத்தி, நெருப்பு மிதித்துக் காவடி எடுக்கும் பெரும் புரட்சியாளர்களாகவும் அவர்கள் உள்ளனர்.

இது குறித்து, 'தி இந்து' 08.02.15 ஆம் நாளிட்ட தமிழ் நாளேட்டில் 'இயக்குனர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்' என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதே செய்தியில், 'இந்த இயக்கம் புதிய அரசியல் கட்சியல்ல என்றும், நாம் தமிழர் கட்சியில் ஒரு இயக்கமாகச் செயல்படும் என சீமான் தெரிவித்தார்' என்றும், 'நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்தக் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்குவதற்காக இந்தப் புதிய இயக்கத்தைத் தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது' என்றும் இருவேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் கட்சி விவகாரம் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். 'நாம் பண்பாட்டுப் புரட்சி' பற்றி மட்டும் பார்க்கலாம். கடந்த 7ஆம் தேதி பழனியில் தொடங்கப்பட்டுள்ள வீரத் தமிழர் முன்னணி நிகழ்ச்சி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இணையத்தளத்தில் (யூ ட்யூப்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றரை மணி நேரம் சீமானின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அதனை முழுமையாகக் கேட்ட பின் நமக்குப் பல செய்திகள் புரிகின்றன.

தன் உரையின் மூலம் அவர் மூன்று செய்திகளைத் தொட்டுக் காட்டுகின்றார். முருகன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதும், தமிழின உணர்வின் வெளிப்பாடு என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பின் வடிவம் என்பதும் அவருடைய கருத்துகளாக வெளிப்படுகின்றன.

முன்னோர் வழிபாடு என்பது புதுமையும் இல்லை, புரட்சியும் இல்லை. காலகாலமாகத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் அது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை வானுறையும் தெய்வத்துள் வைத்துப்' பார்க்கும் மரபு! அதனைத்தான் நாட்டார் தெய்வ மரபு என்கிறோம். அந்த மரபில் முருகனை இணைத்து, அவன் நம் முப்பாட்டன் என்கிறது, வீரத் தமிழர் முன்னணி. முருகன், இராவணன், வள்ளுவர் ஆகிய மூவரையும் முன்னோர் வழிபாட்டில் சீமான் சேர்க்கின்றார். முருகன் புராணத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரம். இராவணன் இதிகாசப் பாத்திரம்.வள்ளுவரோ வரலாறு. எல்லோரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி அடிப்பதன் நோக்கம் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

Subavee's special article on Seeman's Veera Thamizhar Munnani

முன்னோர் வழிபாடு, நடுகல் வணக்கத்தில் தொடங்குகிறது. இது குறித்துத் தொல்காப்பியத்திலேயே, "காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்" என்று கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் இது பற்றிய பாடல்கள் உள்ளன. சிலம்பில் கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதே இந்த அடிப்படையில்தான். இந் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், அம்மன், மாடன், வீரன், கருப்பு ஆகிய முன்னோர் வழிபாடுகள் தொடங்கின. மாரியம்மன், காளியம்மன், இசக்கியம்மன் என்றும், சுடலை மாடன், பன்றி மாடன், காட்டு மாடன், புல மாடன் என்றும், மதுரை வீரன், முனிய வீரன், காத்தவராய வீரன் என்றும், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு என்றும் பல தெய்வ வழிபாடாக அவை விரிந்தன.

முருகன் நம் முன்னோன், அவனை வழிபட வேண்டும் என்றால், மாடன், வீரன், அம்மன் எல்லோரும் நம் முன்னோர்தானே! அவர்களையும் வழிபட வேண்டாமா? பிறகு, வருடம் முழுவதும் வழிபடும் வேலை ஒன்றினைத்தானே செய்து கொண்டிருக்க முடியும்? முருகன் நம் முன்னோன் என்பதால் ஆண்டுதோறும் தைப் பூசம் கொண்டாட வேண்டும் என்று கூறும் சீமான், சிவனும் நம் முப்பாட்டனுக்குப் பாட்டன் என்கிறார். அப்படியானால், சிவராத்திரி கொண்டாட வேண்டாமா/

இந்த முன்னோர் வழிபாடு, வீரத்தமிழர் முன்னணி தொடக்கி வைக்கும் பண்பாட்டுப் புரட்சி என்கிறார் சீமான். அப்படியானால், இதுவரை நடந்துவந்த வழிபாட்டுக்கெல்லாம் என்ன பெயர்?

தமிழின உணர்வைத் தூண்டுவது எங்கள் நோக்கம், தமிழின மரபை மீட்பது எங்கள் நோக்கம் என்று அவர் பேசுகின்றார். உண்மைதான், குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்றுதான் தொல்காப்பியம் தொடங்கிப் பழந் தமிழ் நூல்கள் எல்லாம் கூறுகின்றன. ஆனால் அவை முருகனை மட்டும் குறிப்பிடவில்லை. வேறு பல தெய்வங்களையும் குறிப்பிடுகின்றன.

Subavee's special article on Seeman's Veera Thamizhar Munnani

"மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் உலகமும்"

என்கிறது தொல்காப்பியம்! மைவரை (குறிஞ்சி) உலகத்துச் சேயோனை (முருகன்) மட்டும் வணங்கினால் போதுமா? காடுறை (முல்லை) உலகத்து மாயோனை (கண்ணன்), தீம்புனல் (மருதம்) உலகத்து வேந்தனை (இந்திரன்), பெருமணல் (நெய்தல்) உலகத்து வருணனை எல்லாம் வணங்க வேண்டாமா? அவர்களுக்கும் வெவ்வேறு நாள்களில் விழா எடுக்க வேண்டாமா?

வீரத் தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய சீமான், தான் பக்தி மார்க்கத்தில் கலந்து விட்டதை மறைப்பதற்கு, இதுதான் பகுத்தறிவு என்கிறார். முருகனை வணங்க வேண்டும் என்று சொல்லும் அவர், பிள்ளையாரையும், ராமரையும் எதிர்த்துப் பேசுகின்றார். பார்ப்பனிய எதிர்ப்பில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றார். இது ஒரு ஏமாற்று வித்தை. தமிழ் உணர்வின் பெயரால், பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காயடிக்கும் தந்திரம்.

பழனிக்குப் போய் முருகனை வணங்கினோம் என்கின்றனரே, அங்கு முருகன் சிலைக்குப் பூஜை செய்பவர் யார்? போகர் வழிவந்த புலிப் பாணிச் சித்தர்களா அங்கு கருவறைக்குள் உள்ளனர்? அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே! பார்ப்பனர்கள்தானே இன்று அங்கு ஆதிக்கம் செய்கின்றனர். அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, "என் முப்பாட்டனைக் கண்டதும், மகிழ்ச்சியில் கண் கலங்கி நின்று விட்டேன்" என்கிறார். கண் கலங்கி விட்டதால், உள்ளே இருக்கும் பார்ப்பனரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது! பாட்டனைப் பார்க்கப் போன அவர், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தாராம். அவரே சொல்கிறார். அடேயப்பா...புதிய பண்பாட்டுப் புரட்சிதான்.

Subavee's special article on Seeman's Veera Thamizhar Munnani

"ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்" என்கிறார் சீமான். எப்படித் தெரியுமா? நாரதர் கொண்டுவந்த மாம்பழக் கதையை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார். பார்ப்பனியச் சூழ்ச்சியை எதிர்த்து அவர் பழனி மலைக்கு வந்து விட்டாராம். அந்தக் கதையே பார்ப்பனியக் கதைதான். அதனை நம்புவதும், சிவபெருமான் நக்கீரரிடம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியதை நம்புவதும் எந்த விதமான பகுத்தறிவு என்று நமக்குப் புரியவில்லை. இந்த இரண்டு கதைகளையும் எடுத்துச் சொல்லித் தன் தொண்டர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்ட முயல்கின்றார் அவர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரனுக்கு முன்பே தமிழனுக்குத் தனிநாடு கேட்டவர் முருகன் என்கிறார். எந்த வரலாற்று நூலிலிருந்து இந்தச் செய்தி கிடைத்ததோ தெரியவில்லை.

இந்தக் கட்டுரையைப் படித்ததும், இங்கு எழுப்பப்பட்டுள்ள எந்த வினாவிற்கும் விடை சொல்லாமல், தி.மு.க.வில் யாரும் கோயிலுக்குப் போவதில்லையா, கலைஞர் வீட்டில் யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாதா என்று நண்பர்கள் சிலர் பின்னூட்டம் இடுவார்கள் என்பதை அறிவேன். அது தனி மனித நம்பிக்கைக்கு உட்பட்டதே தவிர, அதற்கென்று தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை.

சீமானின் துனைவியாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமானால், அவர் காவடி தூக்கிக் கொண்டு போவது அவருடைய சொந்த விருப்பம். அதனை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. கேட்கவும் முடியாது. ஆனால் அதனையே ஒரு தத்துவமாக்கி, அதற்கு ஒரு அணியையும் உருவாக்கி, அவற்றை நியாயப்படுத்துவது நேர்மையாகாது!

உண்மையில் இந்த அணிக்கு இப்போது என்ன தேவை வந்தது என்பதை அவரே அவருடைய பேச்சின் நடுவில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பஞ்சாபைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மான், சீமானிடம், "கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?" என்று கேட்டாராம். அது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்ததாம். பிறகு, அம்பேத்காரைப் படித்த போது, பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அராசியல் புரட்சி செய்ய முடியாது என்று அவர் எழுதியிருந்தாராம். அதனால்தான் இந்த இயக்கம் என்கிறார் அவர்.

கோயிலைப் பிடித்தவரெல்லாம் கோட்டையைப் பிடித்து விடலாம் என்றால், தமிழ்நாட்டு ஆட்சியை என்றோ பா.ஜ.க. பிடித்திருக்குமே? சரி, அவர் எப்படியாவது கோட்டையைப் பிடித்துவிட்டுப் போகட்டும். அதற்காக அம்பேத்கார் கூற்றினை இப்படியா கொச்சைப்படுத்துவது?

பண்பாட்டுப் புரட்சியில் முருகனுக்காக மொட்டை போட்டு, எதிர்காலத்தில் தமிழனுக்கும் மொட்டை போடலாம் என்ற எண்ணத்தில்தான் வீரத் தமிழர் முன்னணி உருவாகியுள்ளதோ?

English summary
Subavee's Special article discusses on the recent launch of Seeman's Veera Thamizhar Munnani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X