For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் உண்மைகள் வரும்: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர். இதுபற்றி தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்தால் கூட பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

Karunanidhi questions EC

தேர்தல் முடிந்த பிறகும், தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நின்றபாடில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து அறிவித்தார்கள். காரணம் என்ன சொன்னார்கள் என்றால், "பணம் பட்டுவாடா" என்றார்கள். பணம் பட்டுவாடா நடைபெற்றதற்காக தேர்தலை ஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில் பல தொகுதிகளிலும் ஒத்தி வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளிலும், ஆளுங்கட்சி பணம் பட்டுவாடா செய்தது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா என்ன? பணம் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி பதினைந்து நாட்களாக ஏடுகளில் வராத செய்திகளா? கடந்த 24-4-2016 அன்று "தினமலர்" நாளிதழின் முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? "வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் - 45 இடங்களில் சோதனை" என்பது தான்! அந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில்,

"தமிழக சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரித் துறை துணை இயக்குனர் தலைமையில், ஒரு உதவி கமிஷனர், ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம் பெற்ற படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் சில வாரங்களாக, பண நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். கரூரில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. கரூரில் அன்பு நாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இது வரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங் களில் விசாரித்த போது, "அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்" எனத் தகவல்கள் கிடைத்தன" என்று "தினமலர்" செய்தி வெளியிட்டு எத்தனை நாட்கள் ஆகிறது?

இன்று எங்கே போனார் அந்த அன்புநாதன்? அவரிடமிருந்து கைப்பற்றிய உண்மையான பணம் எவ்வளவு? தேர்தல் கமிஷன் அதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்தது? ஏன் மூடி மறைத்தது?

அதே இதழில் வெளி வந்த மற்றொரு செய்தியில், "தமிழகம் முழுவதும் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகச் சந்தேதிக்கப்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, "கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது" என்று தெரிவித்தார்களே; என்ன ஆயிற்று? எங்கே அந்த காமரா? அதிலே சிக்கிய அமைச்சர்கள் யார்? ஏன் அந்தக் காமரா மறைக்கப் பட்டது? தேர்தல் கமிஷன் அதுபற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? தேர்தல் கமிஷன் என்ற ஒன்று தமிழகத்திலே செயல்பட்டதா?

இந்தத் தகவல்கள் "தினமலர்" நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன. இந்தத் தகவல்கள் வருமான வரித் துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன. செய்திகள் வந்து பல நாட்கள் ஆகியும், தமிழக அரசின் சார்பிலோ, தேர்தல் கமிஷன் சார்பிலோ இதற்கு ஏன் விளக்கம் அளிக்க வில்லை?

நாளேடுகளில் வந்த செய்திகளில், "அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன் தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது. அவர்கள் சுதாரித்து, இரவே பல கோடி ரூபாயை வேறு இடங்களில் பதுக்கியதாகவும் தெரிகிறது. அன்பு நாதன் குடோனில் இருந்து 10.33 இலட்சமும், வீட்டிலிருந்து 4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றி தேர்தல் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்" என்றும் உள்ளது. குறிப்பாக இந்த அன்புநாதன் ஒருசில முக்கிய அமைச்சர்களின் பினாமி என்றும், அந்த அமைச்சர்கள் அவரது இல்லத்திற்கு வந்ததெல்லாம் காமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அந்தக் காமராவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அதுபற்றி இந்நாள் வரை தேர்தல் கமிஷன் எதுவும் சொல்ல வில்லையே, ஏன்?

English summary
Karunanidhi questions EC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X