இந்தியாவை 4 பக்கமும் அணைக்கட்டும் பிரச்சனைகள்.. காரணம் ஒரேயொரு விஷயம்!
ஈரான் போர் துவங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது என்றால் மிகையில், பியூச்சர்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் 95-105 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டாலும் ஸ்பாட் சந்தையில் இதன் விலை அதிகமாகவே இருந்து வருகிறது. உண்மையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு தெரியுமா?
இந்திய பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இதை இந்தியன் ஆயில் பேஸ்கட் (Indian Crude Oil Basket) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு இன்று அறிவித்துள்ள தகவல் படி ஏப்ரல் மாதம் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 114 டாலராக உயர்ந்துள்ளது.

ஈரான் போர் தொடங்கும் முன்பு ஜனவரியில் 63 டாலராகவும், பிப்ரவரியில் 69 டாலராகவும் இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது ஏப்ரலில் 114 டாலராக ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்குள் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஜனவரியில் 63 டாலராக இருந்த விலை, ஏப்ரலில் 114 டாலராக மாறியிருப்பது 80 சதவீதத்திற்கும் மேல் உயர்வைக் காட்டுகிறது. இந்த விலை உயர்வு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எரிபொருள் விலையில் நேரடியாக பாதிக்கிறது.
4 பெரிய பிரச்சனை
கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு 10 டாலர் உயரும் போதும் இந்தியப் பொருளாதாரத்தில் நான்கு முக்கிய விஷயங்களை பாதிக்கப்படுகின்றன:
பணவீக்கம் (CPI) அதிகரிக்கும் - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, போக்குவரத்து செலவு உயரும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) மோசமடையும் - எண்ணெய் இறக்குமதிக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கும் காரணத்தால் இது நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை பாதிக்கும்.
ஜிடிபி வளர்ச்சி குறையும் - தொழில்துறை உற்பத்தி செலவு அதிகரிப்பதால் பொருட்களின் விலை உயரும், இதன் மூலம் வர்த்தகம் குறையும், இதன் வாயிலாக வேவைவாய்ப்பும் பாதித்து கடைசியாக நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி மந்தமடைய செய்யும்.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறையும் - டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்னும் பலவீனமடையும். இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்து மோசமான தாக்கத்தை ஏற்படத்தும்.
இந்த நான்கு பிரச்சனைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால் இந்த நான்கு அம்சங்களும் தொடர்ந்து மோசமடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது கச்சா எண்ணெய் விலை 65 டாலரில் இருந்து 114 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இதன் தாக்கம் முழுமையாக சந்தையில் எதிரொலிக்கும் என அச்சம் நிலவுகிறது.
கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு
உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் கச்சா எண்ணெய் விலை 90 வரை செல்லும் என்று கணித்துள்ளது. ஈரான் போர் இன்றே முடிவடைந்தாலும், கச்சா எண்ணெய் விலை 90-ஆக இருந்தால் இந்தியப் பொருளாதாரத்தில் 70 முதல் 80 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை மோசமான தாக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
ஏற்கெனவே கோடை வெயிலால் உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து பல பொருட்களின் விலை உயரும், இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். பேருந்து, ஆட்டோ, கேப்கள் கட்டணம் உயரும். சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் காய்கறி, பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்று. எனவே உலக சந்தையில் ஏற்படும் எந்த மாற்றமும் நமது அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால், பணவீக்கம் அதிகரிப்பது, ரூபாய் மதிப்பு குறைவது, வேலை வாய்ப்புகள் பாதிப்பது போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை இடியாப்ப சிக்கிலில் மாட்டிக்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications