நிற்காமல் சரியும் தங்கம் விலை! ஆனா இது தொடர்வது டவுட் தான்! காரணம் அமெரிக்கா எடுக்கும் "அந்த" முடிவு
சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இப்போது தடாலடியாகச் சரிய ஆரம்பித்துள்ளது. சர்வதேச மார்கெட்டில் மேஜிக் நம்பரான 4000 டாலரை தாண்டி தங்கம் விலை சரிந்து வருகிறது. இந்த விலை சரிவு இன்னும் எவ்வளவு காலம் தொடரும்.. மீண்டும் விலை ஏற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தாண்டு தொடக்கத்தில் எப்போது டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்தாரோ.. அப்போது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவானது.

சரிவின் பாதையில் தங்கம்
ஆனால், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இடையில் சில நாட்கள் சற்று உயர்ந்தாலும் கூட தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் மக்கள் ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று கூட தங்கம் விலை இந்தியாவில் இரண்டு முறை சரிந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது.. இன்று தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில், மாலையில் மேலும் சரிந்தது.
அதாவது இன்று காலை தங்கம் ஒரு சவரன் ரூ.1,200 குறைந்து ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து ரூ.11,300க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் சவரனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ. 88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கிராமுக்கு ரூ.375 குறைந்து கிராம் 375 குறைந்து, 11,075 க்கு விற்பனை செய்யப்படுகிறது..
சர்வதேச மார்கெட்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாகச் சரிவதே இதற்குப் பிரதானக் காரணமாகும். சர்வதேச மார்கெட்டில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 1.5%க்கு மேல் குறைந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஸ்பாட் தங்கம் 1.4% குறைந்து 3925 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸும் கூட 1.9% சரிந்து 3942 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
மேஜிக் நம்பர்
தங்கம் விலையில் இந்தச் சரிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டெக்னிக்கல் அனாலிசிஸ்படி தங்கத்திற்கு 4000 டாலர் வலுவான சப்போர்ட்டாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பே அந்த 4000 டாலரை உடைத்துவிட்டு கீழே இறங்க 3, 4 முறை முயன்றது. இருப்பினும், அதை உடைக்க முடியாமல் போனது.
இந்தச் சூழலில் தான் அது நேற்றிரவு 4000 டாலர் மார்க்கை உடைத்தது. அதன் பிறகு அதன் விலையை ஏற்ற முயற்சி நடந்தபோதிலும் 4000 டாலரை தாண்ட முடியவில்லை. தற்போதைய டெக்னிக்கல் அனாலிசிஸ்படி தங்கம் விலை 3845 டாலர் வரை போகலாம் என சொல்லப்படுகிறது. அதாவது தங்கம் விலை சரிவு தொடரும் என கருதுகிறார்கள்.
காரணம் என்ன!
அமெரிக்கா சீனா இடையே நிலவிய மோதல் குறைந்து வருவதே இதற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும், நான்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்களையும் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். அறிவித்தார். இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் வசம் இருக்கும் தங்கத்தை விற்று, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால் தங்கம் விலை குறைந்து, பங்குச்சந்தைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு சிக்கல் இருக்கே
அதேநேரம் இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தத் தங்கம் விலை சரிவு நீடிக்காமல் கூட போகலாம். ஏனென்றால் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாளை வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதில் வட்டி விகிதம் குறைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்போதும் வட்டி விகிதம் குறையும்போது தங்கம் விலை கணிசமாக உயரும்.
இந்த முறை வட்டி விகித அறிவிப்பு மார்கெட்டை ஆதிக்கம் செலுத்துமா இல்லை அமெரிக்கா சீனா வர்த்தக விவகாரம் ஆதிக்கம் செலுத்துமா என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். வட்டி விகிதம் குறைப்பு ஆதிக்கம் செலுத்தினால் தங்கம் விலை உயரும். டிரம்ப் சீனா விவகாரத்தில் புதிய அப்டேட் வந்தால் தங்கம் விலை குறையும்!












Click it and Unblock the Notifications