உயில் மட்டும் போதாது.. சொத்துக்களை வில்லங்கம் இல்லாமல் வாரிசுகளுக்கு கொடுக்க செட்டில்மென்ட் பத்திரம் ரொம்ப முக்கியம்!
இன்றைய காலத்தில் பலர் தங்கள் சொத்துக்களை வாரிசுகளுக்கு சரியாக எப்படி பகிர்ந்து கொடுப்பது என்ற கேள்வியில் பெரும் குழப்பத்தில் உள்ளனர். உயில் (Will) மட்டும் எழுதினால் போதும் என்று நினைப்பவர்கள் பின்னர் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
சொத்து பிரச்சனைகள் குடும்ப உறவுகளை கெடுத்து, நீதிமன்றங்களில் நீண்ட காலம் இழுத்தடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பல அனுபவம் வாய்ந்தவர்கள் உயிலுடன் சேர்த்து செட்டில்மென்ட் பத்திரம் (Settlement Deed) என்ற ஆவணத்தையும் பயன்படுத்துகின்றனர். இந்த ஒரு விஷயம் நீங்கள் செய்துவிட்டால் போதும், உங்களுக்கும் சரி, உங்கள் வாரிசுகளுக்கும் சரி எவ்விதமான பிரச்சனையும் காலத்திற்கும் வராது.

உயில் மற்றும் செட்டில்மென்ட் பத்திரம் - என்ன வேறுபாடு
உயில் என்பது ஒரு நபர் இறந்த பிறகு மட்டுமே அவரது சொத்துக்களை பிரித்துக் கொடுக்கும் ஆவணம். இது எளிய காகிதத்தில் எழுதப்பட்டாலும் போதும் என்றாலும், பல சமயங்களில் குடும்ப உறுப்பினர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கின்றனர். மேலும், பழைய உயிலை ரத்து செய்து புதிய உயில் எழுத முடியும் என்பதால், குடும்பத்தில் குழப்பமும் பிரச்சனையும் ஏற்படுகிறது.
ஆனால் செட்டில்மென்ட் பத்திரம் என்பது நபர் உயிருடன் இருக்கும் போதே சொத்துக்களை தனது விருப்பப்படி சட்டபூர்வமாக பிரித்துக் கொடுக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணம். இதில் யாருக்கு என்ன சொத்து கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்டாப் டியூட்டி செலுத்தி சொத்துக்களை உடனடியாக மாற்றப்படுகிறது. இதனால் இறப்புக்குப் பிறகு வரும் சண்டைகள் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன.
வாரிசுகளை நினைத்து பயம்
பல பெற்றோருக்கு ஒரு பெரிய கவலை உள்ளது. 'நாம் எல்லா சொத்தையும் உயிருடன் இருக்கும் போதே கொடுத்துவிட்டால், குழந்தைகள் நம்மை பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்களா?' என்ற அச்சம் இருக்கும். இந்த பிரச்சனைக்கு செட்டில்மென்ட் பத்திரம் ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது.
இந்த ஆவணத்தில் 'Settlor' அதாவது சொத்தை கொடுப்பவர் தனது வாழ்நாள் முழுவதும் வீட்டில் தங்கும் உரிமை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் குழந்தைகளால் ஏற்கப்படும் என்ற விதியை சேர்க்கலாம். இதனால் பெற்றோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
உயில் + செட்டில்மென்ட் பத்திரம் = சிறந்த தீர்வு
அனைத்து சொத்துக்களையும் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவது சரியல்ல. எனவே பெரும்பாலான மக்கள் புத்திசாலித்தனமாக உயிலையும் செட்டில்மென்ட் பத்திரம்-ஐயும் இணைத்து பயன்படுத்துகின்றனர்.
செட்டில்மென்ட் பத்திரம் மூலம் HUF (குடும்பக் கூட்டு சொத்து) சொத்துக்களை தெளிவாக பிரிக்கலாம். திருமணமான மகள் அல்லது உடல் ஊனமுற்ற குடும்ப உறுப்பினர் போன்றவர்களுக்கு அவர்கள் பின்னர் உரிமைக்காக போராட முடியாத சூழல் இருந்தால், அவர்களுக்கான பங்கை செட்டில்மென்ட் பத்திரம்-ல் தெளிவாகக் கொடுக்கலாம்.
மீதமுள்ள சொத்துக்களை உயில் மூலம் பிரித்துக் கொடுக்கலாம். இந்த இரு ஆவணங்களின் கலவை, சில முக்கிய சொத்துக்களை உயிருடன் இருக்கும் போதே பிரித்து, மற்றவற்றை இறப்புக்குப் பிறகு சர்ச்சை இல்லாமல் மாற்ற உதவுகிறது.
ஏன் இந்த 2 ஆவணமும் அவசியம்?
இன்றைய குடும்ப அமைப்பில் சொத்து பிரச்சனைகள் உறவுகளை முற்றிலும் உடைக்கும் அளவுக்கு சென்றுவிடுகின்றன. Settlement Deed மூலம் உயிருடன் இருக்கும் போதே தெளிவான பிரிவினை செய்வது குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுகிறது. அதே நேரத்தில் உயில் மூலம் மீதமுள்ள சொத்துக்களை கட்டுப்பாட்டுடன் வழங்க முடிகிறது.
2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் இருக்கும் பல குடும்பத் தலைவர்கள் இந்த இரு ஆவணங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, சட்ட வல்லுநர்களின் உதவியுடன் சரியான திட்டமிடலை செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் பிள்ளைகளிடையே ஏற்படும் தகராறுகளைத் தடுத்து, குடும்ப அமைதியைப் பாதுகாக்கும்.
சொத்து திட்டமிடல் என்பது வெறும் சட்ட ஆவணங்கள் அல்ல, அது குடும்பத்தின் எதிர்கால அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான முடிவு. உயில் மட்டும் நம்பாமல், Settlement Deed உடன் இணைத்து சரியான முறையில் திட்டமிடுவது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.












Click it and Unblock the Notifications