இந்தியாவுக்கு உடனே வாங்க.. அமெரிக்காவில் இனி வேண்டாம்.. NRIகளை அழைக்கும் ZOHO ஸ்ரீதர் வேம்பு
Zoho நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு உணர்ச்சிமிகு கடிதம் எழுதியுள்ளார். "பாரதத்தின் சகோதர சகோதரிகளுக்கு" என்று தொடங்கும் இந்தக் கடிதம், இந்தியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப துறையின் எதிர்காலத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் தாயகம் திரும்பி பங்களிக்குமாறு ஸ்ரீதர் வேம்பு தான் எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு தன் இளம் வயதில் குறைந்த பணத்துடன் அமெரிக்கா சென்று, அங்கு வெற்றி பெற்றதை போல் இன்றும் பல இந்தியர்கள் பெரும் பணம் பலம் இல்லாமல் அமெரிக்காவுக்கு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்கள். அமெரிக்கா பல இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்புகளை அளித்ததுள்ளது. அதே நேரத்தில், நன்றியுணர்வு என்பது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சம் என்றும் தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
அமெரிக்காவில் மாறும் சூழல்
தற்போது அமெரிக்க சமூகத்தில் ஒரு பகுதியினர், குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்புகளை பறிப்பதாகக் கருதுகின்றனர். இந்த எண்ணம் பெரும்பான்மையான மக்களிடம் இல்லாவிட்டாலும், அது படிப்படியாக செல்வாக்கு பெற்று வருவதாக அவர் எச்சரிக்கிறார். அமெரிக்காவில் நிலவும் அரசியல் மற்றும் சித்தாந்தப் பிளவுகளில் (hard right vs woke left battle) இந்தியர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஸ்ரீதர் வேம்புவின் கடிதத்தின் மையக் கருத்து மிக முக்கியமானது. இந்தியர்களுக்கு உலக அரங்கில் மரியாதை கிடைப்பது இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தே இருக்கும். இந்தியா வலுவாக இல்லாதவரை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களைப் பார்க்கும் பார்வை மாறாது. தனிப்பட்ட வெற்றிகளை விட, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே உண்மையான மரியாதையைப் பெற்றுத்தரும் என்று ஸ்ரீதர் வேம்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா திறமையான இளைஞர்களுக்கு பஞ்சமில்லாத நாடு, ஆனால் பல தலைசிறந்த நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது இந்தியாவுக்கு பெரும் இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார். குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் இந்த "மூளை வடிகால்" (Brain Drain) நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்துகிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என அழைக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. தாயகம் திரும்பி, இந்தியாவின் இளம் தலைமுறையை வழிநடத்தி, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இது ஒரு தொழில் முடிவு மட்டுமல்ல, தேசத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு பெரிய பணி நமக்கு இருக்கு என்று ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார் விவரிக்கிறார்.
இந்த பதிவுக்கு வழக்கம் போல் பலர் ஆதரவாக பதில் டிவீட் செய்தாலும், பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதில் முக்கியமாக உலக நாடுகளில் இந்தியர்கள் சில லட்சம் மட்டுமே இருப்பார்கள், அதிகமெனில் 1-2 கோடி பேர் மட்டுமே இருக்கும் வேளையில், இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் என்ன செய்கிறார்கள், அவர்களால் இதை செய்ய முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் வேம்பு, இந்தியா தற்போது ஒரே நேரத்தில் கார்பன் பைபர், லேசர், ஜெட் இன்ஜின் என பல துறையில் நிபுணராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உலக நாடுகளில் பெற்ற அனுபவத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் போது எளிதாக வெற்றிப்பெற முடியும். இதேபோல் migrants அதாவது இடம்பெயர்ந்தவர்கள் பொதுவாகவே அதிகளவிலான ஆர்வத்துடனும் முனைப்புடனும் பணியாற்றுவார்கள் இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மூலம் இந்தியாவும், இந்திய மக்களும் வேகமாக முன்னேற முடியும் என விளக்கினார் ஸ்ரீதர் வேம்பு.














Click it and Unblock the Notifications