குடிச்சிட்டு பஸ் ஓட்ட கூடாது! Bus பளபளன்னு இருக்கணும்! டிரைவர், கன்டக்டர்களுக்கு முக்கிய உத்தரவு

  • சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கன்டக்டர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    Advertisement

    போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் , ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை அளித்துள்ளார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் போக்குவரத்துக் கழகங்கள் நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறது.

    போக்குவரத்துத் துறை பொதுமக்களுக்கான சேவைத் துறை ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சிறப்பான பேருந்து சேவையை வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    மகளிருக்கு பெருமளவில் பயன் அளிக்கும் வகையில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை விரிவுபடுத்தி "வெற்றிப் பயணம்" திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலன் கருதி தீபாவளி மிகை ஊதியம் (போனஸ்) ரூ.167.12 கோடி முன்னதாகவே வழங்கியதோடு, வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இரட்டிப்பு படி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இன்று (03/11/2026), மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், பேருந்துகள் இயக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

    Advertisement

    இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் வேண்டும் எனவும், பயணிகளை ஏற்ற மறுப்பது அல்லது பயணிகளைப் பாதி வழியில் இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், பேருந்துகளை தூய்மையாக பராமரித்திட வேண்டும்.

    மேலும், அனைத்து பயணிகளிடமும் மரியாதையுடனும், பொறுமையுடனும் நட்பான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர் மற்றும் நோயாளிகளிடம் கூடுதல் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    Advertisement

    ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பெறப்படும் புகார்கள், மனுக்கள், தொலைபேசி வாயிலான புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் அந்தந்த போக்குவரத்து கழகத்தின் புகார் பிரிவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார்களின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மீது நடைமுறையில் உள்ள சேவை விதிகள் மற்றும் பொருந்தும் நடைமுறைகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேவையான இடங்களில் அரசின் முன் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் பேருந்து இயக்கம் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கள அளவில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கி, பயணிகளிடம் பொறுப்புடனும், கனிவுடனும் நடந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அனைவரும் அந்தந்த பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும் எனவும், வேறு எங்கும் அல்லது பேருந்துகளிலோ எக்காரணம் கொண்டும் தங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    மேலும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் எனவும், பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்ததோடு, சிறப்பு ஆலோசகர்கள் மூலம் அனைத்து போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும், போக்குவரத்து கழக உயர் அலுவலர்களும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் த.சக்திபிரியாவுக்கு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறைப் துறையில் கருணை அடிப்படையில், தட்டச்சர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கி உள்ளார்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil nadu government issues 7 rules and regulations for drivers and conductors should follow strictly and they will be monitored.