"Confidentஆ இருங்க.. நல்லதே நடக்கும்!" விஜய்யின் 'நிழல்' கொடுத்த சிக்னல்... திக் திக் கிளைமாக்ஸ்
சென்னை: தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் (மே 9, 2026) முடிவடையும் நிலையில், கோட்டையில் 'தளபதி' அரியணை ஏறுவாரா அல்லது 'அதிர்ச்சி' காத்திருக்கிறதா என்ற விவாதம் பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கிறது. 116 என்ற எண்ணிக்கையில் வந்து நின்ற வண்டி, பெரும்பான்மைக்குத் தேவையான அந்த ஒரு சில இடங்களுக்காகத் தத்தளிக்கும் இந்த சூழலில், விஜய்யின் நிழலாகத் தொடரும் மெய்க்காப்பாளரின் பதிவு ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
தமிழ்நாடு அரசியல் இப்போது குழப்பமான சூழலில் இருக்கிறது. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஒரு சிக்கலான நிலைமை இருக்கிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தவெக தரப்பு பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விஜய்யின் பாடிகார்டு
இதனால் பனையூர் அலுவலகம் முதல் ராஜ்பவன் வரை பரபரப்பு உச்சத்தில் இருக்கும் சூழலில், விஜய்யின் நீண்டகால மெய்க்காப்பாளரான அருண் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு மெசேஜ் தவெக தொண்டர்களுக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
விஜய்யின் பாதுகாப்பு வளையத்தில் எப்போதும் இருப்பவர் அருண் சுரேஷ்.. பிரச்சாரம், மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் என எதுவாக இருந்தாலும் விஜய்யுடன் எப்போதும் உடன் இருப்பவர் அருண் சுரேஷ்.. இவரது ஒரு மெசேஜ் தான் இப்போது இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
நம்பிக்கையா இருங்க
அருண் சுரேஷ், "Beautiful outcomes come after hard battles" எனப் பதிவிட்டுள்ளார். அதாவது "கடுமையான போர்களுக்குப் பிறகே அழகான முடிவுகள் கிடைக்கும்" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தமிழில் "Confidentஆ இருங்க... நல்லதே நடக்கும்" என்றும் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் டிரேட்மார்க் வசனமான இதை அவரது பாதுகாவலரும் பதிவிட்டுள்ளார். அந்த ஒற்றை வரி தான் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதி எனத் தொண்டர்களை நம்ப வைத்துள்ளது.
குழப்பம்
நேற்றிரவு வரை விஜய் முதல்வராவது உறுதி என்றே சொல்லப்பட்டது. இன்று சனிக்கிழமை விஜய் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தகவல்களும் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நம்பர் விளையாட்டு வில்லனாக மாறியது.. இப்போது விஜய் தரப்பின் பலம் 116ஆகவே இருக்கிறது. தவெக (107 - விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிடுவார்) + காங்கிரஸ் (5) + சிபிஐ (2) + சிபிஎம் (2) = 116 ஆகவே இருக்கிறது.
அடுத்து என்ன?
ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஐயுஎம்எல் (2 இடங்கள்), "நாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடிப்போம்" என அறிவித்தது விஜய்க்குப் பின்னடைவானது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, "பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை" எனத் தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளதுதான் இப்போதைய சஸ்பென்ஸ். இப்போது விசிக கையிலேயே எல்லாம் இருக்கிறது. தவெக ஆதரவு நிலைப்பாட்டை விசிக எடுத்தால் ஆட்சி அமையும். இதனால் திருமாவளவன் முடிவை எதிர்நோக்கியே அனைவரும் இருக்கிறார்கள்.
இப்போது வரை விசிகவின் நிலைப்பாடு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மாலை 4 மணியளவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications