ஆளுநருக்கு எதிராக முதல்முறையாக வாய் திறந்த தவெக.. "ஆர்எஸ்எஸ்- பாஜக கைப்பாவை!" திடீர் ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்டது. விஜய் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் போதிலும் அவரது பதவியேற்பு விவகாரம் ஒரு மிகப் பெரிய அரசியல் யுத்தமாக மாறியுள்ளது. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதிக்கும் சூழலில், இதைப் பலரும் விமர்சித்தாலும் விஜய் கட்சி அமைதியாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் முதல்முறையாக ஆளுநர் செயல்பாட்டைக் கண்டிக்கும் வகையில் தவெக சில கருத்துகளைக் கூறியுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஆட்சி அமைக்க தவெகவால் முடியவில்லை.

விஜய் மவுனம்
தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட தனிப்பெரும்பான்மையை வேண்டும் என ஆளுநர் சொல்வதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆளுநரின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், தவெக தரப்பில் இருந்தோ அல்லது அக்கட்சித் தலைவர் விஜய்யை ஆளுநர் செயல்பாட்டைக் கண்டிக்கவில்லை.
இதற்கிடையே தவெக தரப்பில் இருந்து முதல்முறையாக ஆளுநருக்கு எதிராக சில கருத்துகள் வந்துள்ளது. அக்கட்சியின் நிர்வாகி டி.செல்வம் ஆளுநரின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் பதவியேற்பு விழா தாமதமாவது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தவெக நிர்வாகி செல்வம், ஆளுநரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
முதல்முறையாக வந்த எதிர்ப்பு
ஆளுநர் அர்லேகரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய செல்வம், "ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தைச் செயல்படுத்த வேண்டிய ஒரு உதவியாளர் மட்டுமே.. அவருக்குத் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. தனிப்பெரும் கட்சியான தவெகவை அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதுதான் அவரது கடமை. அதைவிடுத்து, ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அவர் டிராமா செய்வது ஏன்? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மவுத் பீஸ் போலவே ஆளுநர் செயல்படுகிறார்.
மக்கள் விஜய்க்கு அங்கீகாரம் அளித்துவிட்டார்கள், ஆனால் ஆளுநர் பாஜக கட்டளைப்படி ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். விஜய் வெறும் அரசியல்வாதி அல்ல; அவர் தமிழகத்தைக் காப்பாற்ற வந்த ஒரு 'அவதார புருஷன்'. மக்களின் பார்வையில் அவர் ஒரு காப்பானாகவே தெரிகிறார். கடவுளின் அருளால் அவர் நிச்சயம் ஊழலற்ற, வெளிப்படையான ஒரு மக்கள் ஆட்சியைத் தருவார். அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருப்போம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விசிக
விசிக குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் தெளிவாக உள்ளனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் ஒரு குழப்பத்தில் இருக்கிறார். அவர் ஸ்டாலினின் பிடியில் இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஸ்டாலினை சந்தித்த பிறகே அவர் முடிவெடுக்கத் தயங்குகிறார். ஆனால் விசிக தொண்டர்களில் பெரும்பான்மையானவர்கள் விஜய்யுடன் இணையவே விரும்புகிறார்கள்" என்றார்.
#WATCH | Chennai | TVK leader T Selvam says, "The people have given a mandate to TVK and Mr Vijay. The other parties are trying to do politics in between. The Governor is the facilitator of the Constitution, but doesn't have authority. It is his duty to invite TVK and prove the… pic.twitter.com/lKlYJm8n7W
— ANI (@ANI) May 9, 2026
அமமுக விவகாரம்
அமமுக எம்எல்ஏ குதிரை பேர விவகாரம் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் யாரிடமும் பேரம் நடத்தவில்லை.. குதிரை பேரம் செய்வது திமுக மற்றும் அதிமுகவிற்கு புதிதல்ல. ஆனால் தவெக அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடவில்லை. நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை. எடுக்கவில்லை. ஒரே மாதிரியான கொள்கை கொண்ட இடதுசாரிகளும் காங்கிரஸும் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தந்துள்ளனர். அமமுக எம்எல்ஏ கையெழுத்து விவகாரத்தில் டிடிவி தினகரன் கூறியவை பொய்கள். பாஜகவின் தூண்டுதலால் சொல்லப்படும் பொய்கள் தான் அவை..! டிடிவி தினகரன் எப்படிப்பட்ட நபர் என்பதை நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications