வங்கதேச காரனுக்கு இடமில்லை.. மே.வங்க புலம்பெயர் தொழிலாளிக்கு ஒடிசாவில் நேர்ந்த கதி.. உயிரே போச்சு
புவனேஸ்வர்: வங்கதேசத்தை சேர்ந்தவனுக்கு இங்கு இடமில்லை என்று கூறி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகளிடம் தகராறு செய்த 6 பேர் கும்பல் ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜூயல் செய்க். இவர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தங்கி புலம்பெயர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது 6 பேர் கும்பல் அங்கு சென்றது. அந்த கும்பல் ஜூயல் செய்க்கிடம் பீடி தரும்படி கேட்டுள்ளது. அதற்கு அவர் பீடி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் ஜூயல் செய்க்கிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜூயல் செய்க்கிற்கு ஆதரவாக வந்தனர். இதனால் கோபமடைந்த 6 பேர் கும்பல், ‛‛வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு இங்கு இடமில்லை. இங்கிருந்து செல்லுங்கள் ''என்று விரட்டியது. அதற்கு அவர்கள் ‛‛நாங்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்'' என்று கூறினர்.
இதனால் அந்த கும்பல் ஆதார் கார்டை காட்டும்படி கூறி பிரச்சனை செய்தது. அப்போது அந்த கும்பல் ஜூயல் செய்க் உள்பட இன்னும் சிலரை சரமாரியாக தாக்கியது. இதில் பலரும் காயமடைந்தனர். ஜூயல் செய்க் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அடித்து கொன்ற வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications